Published : 14 Mar 2019 13:45 pm

Updated : 14 Mar 2019 13:54 pm

 

Published : 14 Mar 2019 01:45 PM
Last Updated : 14 Mar 2019 01:54 PM

காமராஜரை ஒதுக்கி வைத்தது காங்கிரஸ் தானே? - ராகுல் காந்திக்கு தமிழிசை எழுப்பும் 10 கேள்விகள்

10

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார்.


இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராகுல் காந்திக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்த 10 கேள்விகள்:

1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் ராகுல் காந்தி காவிரி பிரச்சினை மற்றும் மேகேதாட்டு அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் முதல்வராக இருந்த சித்தராமையாவிடம் காவிரி நீரின் தமிழகத்தின் உரிமை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா?

2. பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரை அறிவித்து தேர்தலைச் சந்திப்பது அராஜகம் என்று கூறும் ராகுல் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசியக் கட்சி இருப்பதும் நாட்டின் பிரதமராக இருப்பதும் ஒரு பெரிய அராஜகம் இல்லையா?

3. ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் எனக்கூறும் ராகுல் கடந்த காலத்தில் உங்கள் பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் மாபெரும் ஊழல்களைக் கூட்டாகச் சேர்ந்து ஊழல் ஆட்சியாக நடைபெற்றது உங்களுக்குத் தெரியாதா?

4. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேலூர் சிறையில் உங்கள் சகோதரி பிரியங்கா எதற்காக ரகசியமாகச் சந்தித்தார் என்பதை விளக்க முடியுமா?

5. இலங்கைத் தமிழர் படுகொலைக்குப் பொங்கியவர்கள், கண்ணீர் விட்டவர்கள், கள்ளத்தோணியில் சென்றவர்கள், கோடம்பாக்கத்தில் சென்று சினிமா பாணியில் ராணுவ உடை வாங்கி பாவனை காட்டியவர்கள், எல்லாம் பொன்னாடை போர்த்தி தேர்தலுக்காக நாடகமாடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கேட்பது நியாயமா? அப்பாவி இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சியின் பங்கு எதுவுமில்லை என்று பதில் கூற உங்களுக்குத் தைரியமிருக்கிறதா?

6. வட இந்தியா, தென்னிந்தியா என்று இந்தியாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பேசும் ராகுல், நீங்கள் எப்படி தேசியத் தலைவர் ஆவீர்கள்?

7. மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் எனக்கூறும் ராகுல், உங்கள் தமிழக கூட்டணி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று கேட்டீர்களா?

8. ஊழல் இல்லாத நல்லாட்சி புரிந்த காமராஜர் பெயரைச் சொல்லி மோடி ஓட்டு கேட்கிறார் என்று கூறுகிறீர்களே, அதே காமராஜரை ஒதுக்கி வைத்தது உங்கள் காங்கிரஸ் கட்சி தானே?

9. பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை போன்றே 'மேட் இன் தமிழ்நாடு' என தமிழ்நாட்டை மாற்றுவோம் எனக்கூறும் ராகுல் புதிதாக வேறு ஏதேனும் திட்டத்தைத் தொடங்க தெரியாதா? உங்கள் சொந்தத் தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா? இதில் உங்கள் சொந்தத் தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யாமலே தமிழ்நாட்டை 'மேட் இன் தமிழ்நாடு' என மாற்றுவோம் எனக்கூறுவது நியாயமா?

10. தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்களே, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ஐ ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கியது யார் என்று கூற முடியுமா?

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறவிடாதீர்!  ராகுல்காந்திதமிழிசை சவுந்தரராஜன்பாஜககாங்கிரஸ்பிரதமர் நரேந்திரமோடிRahulgandhiTamilisai soundarrajanBJPCongressPM narendra modi

  Sign up to receive our newsletter in your inbox every day!

  You May Like

  More From This Category

  More From this Author

  x