Published : 15 Mar 2019 10:51 AM
Last Updated : 15 Mar 2019 10:51 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதும் எந்தக் கட்சிக்குத் தாவலாம் என்ற யோசனையில் இருந்த இவருக்கு வலை வீசியது பா.ஜ.க. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் தன்னை அக்கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார் நயினார் நாகேந்திரன். தொடர்ந்து அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
பாஜகவில் இணைந்தபோது நயினார் நாகேந்திரனை ராஜ்யசபா எம்.பி.யாக்குவதாக கட்சி மேலிடம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி முடியப் போகும் இத்தருணத்தில் ராஜ்யசபா எம்.பி. ஆக முடியாததால், மக்களவை எம்.பி.யாகி விடுவது என்ற கணக்கில் தனது பூர்வீகமான நெல்லை தொகுதியை குறி வைத்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளே ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் தற்போது ராமநாதபுரத்தை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறார் நயினார் நாகேந்திரன்.
ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக் கப்பட்டால் அங்கு தான் போட்டியிடுவது, தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்யத் தயார் என்பதை டெல்லி மேலிடத்திடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதற்கு தமிழக பாஜகவும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன். ராமநாதபுரம் முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதால் நயினார் நாகேந்திரனை அங்கு நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் அ.தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் இருப்பதால் தங்கள் கட்சியில் இருப்ப வர்களை அங்கு நிறுத்தினால் வெற்றி பெற வைக்க முடியாது என்று கணக்குப் போட்ட அ.தி.மு.க. தலைமை ராமநாதபுரத்தை பாஜகவுக்கு கொடுக்க முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ராமநாதபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் குப்புராமு, புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் ஆகியோரும் ராம நாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 தேர்தலில் அப்போது பாஜகவில் இருந்த திருநாவுக்கரசர் போட்டியிட்டு 1,28,322 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். அதேபோல் 2014 தேர்தலில் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள குப்புராமு போட்டியிட்டு 1,71,082 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த இருவரும் போட்டியிட்டபோது அதிமுக, திமுக போன்ற முக்கிய கட்சிகளில் கூட்டணி இல்லை.
தற்போது பாஜக கூட்டணியில் அதிமுக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக, தமாகா, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி பலமாக உள்ளதால் பாஜக எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT