Last Updated : 16 Mar, 2019 12:43 PM

 

Published : 16 Mar 2019 12:43 PM
Last Updated : 16 Mar 2019 12:43 PM

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சிக்கல்: தட்டாஞ்சாவடியை திமுகவுக்கு ஒதுக்கியதால் இந்திய கம்யூனிஸ்ட் கடும் அதிருப்தி - இன்று நிர்வாகக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு

புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியதால் இந்திய கம்யூனிஸ்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. காங்கிரஸ் நேற்று நடத்திய கூட்டணிக் கட்சி கூட்டத்தில் இக்கட்சி பங்கேற்கவில்லை.

தொகுதி நிர்வாகிகளை சந்தித்த பின்பு இன்று நிர்வாகக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலர் சலீம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தட்டாஞ்சாவடி தொகுதியாக இருந்தபோது என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி 1991-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது அத்தொகுதி தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் என மூன்று தொகுதிகளாக உருவானது. 2011 மற்றும் 2016-ல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் அசோக் ஆனந்த் தண்டனை பெற்றதையடுத்து, அவரது பதவி பறிக்கப்பட்டு, அத்தொகுதி காலியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த தேர்தலில் இத்தொகுதியில் அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்.,) 12,754, சேது செல்வம் (இந்திய.கம்யூ.,) 5,296, காசிநாதன் (அ.தி.மு.க.) 1,649, கலியபெருமாள் (தி.மு.க.) 1,467, சிவானந்தம் (பா.ஜ.க) 897, முருகசாமி (பா.ம.க.) 227, ஜெயபாலன் (சுயே.) 56, பசுபதி (ஐ.ஜே.கே.) 33 என வாக்குகளை பெற்றிருந்தனர். இத்தொகுதியில் நோட்டாவிற்கு 922 வாக்குகள் கிடைத்தன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டாலும் 4ம் இடத்தையே பிடித்து டெபாசிட்டை இழந்தது.

இத்தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய கம்யூனி்ட் கட்சி மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு கூட்டணி உருவாகும் முன்பே முயற்சியை எடுத்தது. இதற்காக திமுக தலைமை வரை புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் சென்று வந்தது.

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் தட்டாஞ்சாவடியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு எடுத்தது. அதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயத்தையும் கடந்த வியாழன்று சந்தித்து பேசினர். ஆனால் அன்றைய இரவே சென்னைக்கு திமுக நிர்வாகிகளுடன் சென்ற காங்கிரஸ் தரப்பு, இத்தொகுதியில் திமுக போட்டியிட உள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் தரப்பு கடும் அதிருப்திக்கு சென்றுள்ளது.

அதையடுத்து நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி நடந்த கூட்டணிக் கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் நடத்தியது. தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட வாய்ப்பு தரப்படாதது தொடர்பாக இக்கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபற்றி இந்திய கம்யூ. நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், "எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்க உரிமை உள்ளது. மக்களவைத் தேர்தலில் சிபிஐ 30 தொகுதிக்கும் வேலை செய்ய வேண்டும். அதனால் எங்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு தர வேண்டும். கடந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர் 4-ம் இடத்தை பிடித்து டெபாசிட் இழந்தார். ஆனால் எங்கள் கட்சி இரண்டாம் இடம் பிடித்தது. இதைக் கருத்தில் கொண்டு நியாயமாகவே சிபிஐ போட்டியிட வாய்ப்பு தந்திருக்கலாம்" என்றனர்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீமிடம் கேட்டதற்கு, "தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக போட்டியிடும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் நாங்கள் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பணிபுரிவோம். அதே நேரத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி குறித்து கலந்து பேசி முடிவு எடுப்போம். இன்று நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளோம். தமிழக தலைமைக்கும் இவ்விஷயத்தை கொண்டு செல்ல உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தொகுதி தேர்தல் தொடர்பாக புதுச்சேரி வடக்கு திமுக அமைப்பாளர் எஸ்.பி சிவக்குமார் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் தொகுதி செயலர் சிவதாசன் உட்பட நிர்வாகிகள் பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். விருப்ப மனு பெறும் முன்பே வேட்பாளரை தலைமையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு விரைவாக கூட்டம் நிறைவடைந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x