Published : 28 Mar 2019 08:48 AM
Last Updated : 28 Mar 2019 08:48 AM

பசு பாதுகாப்பை காங்கிரஸ் எப்போதுமே ஆதரித்துள்ளது!- கமல்நாத் பேட்டி

மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்திருக்கும் காங்கிரஸ்  மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கடுமையான யுத்தத்துக்குத் தயாராகிறது. முதலமைச்சர் கமல்நாத் அளித்த பேட்டியின் சுருக்கம்:

தொடர்ந்து 15 ஆண்டு காலம் பாஜக ஆண்டதற்குப் பின் பதவி ஏற்றுள்ளீர்கள்; ஆனால், உங்களுடையதும் பாஜக ஆட்சியின் நீட்சியாகவே தெரிகிறதே?

எந்த வகையிலும் அல்ல; முந்தைய அரசுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. மாநிலத்தின் எல்லா அமைப்புகளையும் காவிமயமாக்குவதில் ஆர்வம் காட்டினர்.  எங்கள் அரசின் கொள்கைகள், தேர்தல் அறிக்கைப்படிதான் உள்ளன. வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றிவிட்டோம்.

எந்தெந்தத் துறைகளில் காவிமயமாக்கல் நடந்தது என்று அடையாளம் கண்டீர்களா?

பல துறைகள். இதழியல் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பல அமைப்புகளை உருவாக்கினார்கள். அவை பொது நன்மைக்கானவை அல்ல. அரசு நிதியில் கட்சியை வளர்க்க அவற்றை ஏற்படுத்தினார்கள். நாங்கள் மெதுவாக அவற்றை அகற்றிவருகிறோம்.

காவிமயத்தை எதிர்ப்பதில் உறுதி என்கிறீர்கள்; பசுவைக் கொன்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் சிலருக்கு எதிராகத் தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்குப் பதிவுசெய்திருக்கிறீர்களே, ஏன்?

அது எங்களுடைய அரசின் கொள்கை அல்ல. உள்ளூர் அளவில் காவல் துறையினர் அப்படிச் செயல்பட்டனர். நான் அதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தேன்.

பசுவதைக்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தலை வழங்கிவிட்டீர்களா?

தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்பது தேசப் பாதுகாப்பு தொடர்பானது. பசுவுக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தியது முந்தைய அரசின் கொள்கை.

பசு பாதுகாப்பு பாஜகவுக்கு முக்கியம். உங்களுடைய அரசும் மக்களுடைய வரிப்பணத்தில் பசு பாதுகாப்பு குடில்களை அமைக்கிறது. நல்ல நிர்வாகம் என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்தீர்கள். இச்செயல்கள் எப்படிப் பொருந்துகின்றன?

பொருந்துவதுதான்; பசுக்களைப் பாதுகாக்க வேண்டும், குடில்களை அமைக்க வேண்டும் என்பதை காங்கிரஸும் எப்போதும் ஆதரித்துவந்திருக்கிறது. முந்தைய அரசு எதையுமே செய்யவில்லை. அவர்கள் இதில் அம்பலப் பட்டுவிட்டார்கள். நாங்கள் எதை நம்புகிறோமோ அதைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறோம். பசுக் குடில்களை ஊக்குவிக்கிறோம்.

பசுக்களைப் பாதுகாப்பது வேளாண் துறைக்குப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது; கிராமங்களில் திரியும் பசுக்கள் பயிர்களை மேய்கின்றன. இதனால், வேளாண் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லையா?

நான் அப்படி நினைக்கவில்லை. ஒழுங்காக, பசு காப்பகங்களைக் கட்டினால் அவை எங்கும் திரிந்து பயிர்களை மேயாது.

கடன் ரத்துமூலம் விவசாயத் துறைக்கு எவ்வளவு காலம் நிவாரணம் அளிப்பீர்கள்?

விவசாயி கடனில் பிறந்து, கடனில் இறக்கிறார். கடன் ரத்து அதற்குத் தீர்வு அல்ல. கடன் ரத்து என்பது நிவாரணத்துக்கான வழிகளில் ஒன்று. விவசாயத்தையே நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் 70% மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். முன்பு பற்றாக்குறை மட்டுமே பிரச்சினையாக இருந்தது; இப்போது உபரியும்கூடப் பிரச்சினையாகிறது. மாறும் சூழலுக்கு ஏற்ப நம் கொள்கைகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

மிசா சட்டப்படி கைதாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நிறுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறீர்கள், ஏன்?

முந்தைய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் ஓய்வூதியம் வழங்கியது. பலர் போலியாகவும் ஓய்வூதியம் வாங்கிவந்தார்கள். நாங்கள் அதை அகற்றிவிட்டோம்.

இந்திரா, ராஜீவ் இப்போது ராகுல் என்று அனைவருடனும் கட்சிக்காக வேலை செய்திருக்கிறீர்கள். அந்தக் குடும்பத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா இப்போது ராகுல் என்று எல்லோருடனும் கட்சிப் பணியாற்றியிருக்கிறேன். அனைவரும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள். நாடும், அரசியலும்கூட அப்போது வேறாக இருந்தது. சவால்களும் வேறு, அவர்களுடைய செயல்படும் விதமும் வேறு.

அந்தக் குடும்பத்திலிருந்து ராகுல் எப்படி வித்தியாசப்படுகிறார்?

அவர் வித்தியாசப்படவில்லை. இளகிய மனம் படைத்தவர். மிகவும் புத்திசாலி. நாட்டின் பல்வேறுபட்ட பின்னணிகளைக் கொண்ட பிரச்சினைகளை மிக வேகமாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்வதைப் பாராட்டுகிறேன்.

அரசியலில் இந்துத்துவக் கருத்துகள் புகுந்ததின் நீண்டகால விளைவுகள் என்னவென்றால் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்பது தேய்ந்துவருகிறது; இதற்கு மாற்றுக் கொள்கைகள் உள்ளனவா, எப்படி?

சமூகத்தில் எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. அதேசமயம், ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவம் என்று வரும்போது வெறும் அடையாளத்துக்காகச் செய்வது சரியாக இருக்காது; ஒருவரைத் தேர்தலில் நிறுத்தினால் அவர் வெற்றிபெற வேண்டும். போட்டியிட வாய்ப்பு தந்து அவர் தோற்றுவிட்டால், அவர் எந்தச் சமூகத்தவரோ அதற்கும் பிரதிநிதி கிடைக்க மாட்டார்.

மத்திய பிரதேசத்தில் உங்களுடைய ஆட்சிக்கு மாயாவதியின் ஆதரவு அவசியம். சமீபகாலமாக, அவர் காங்கிரஸுக்கு எதிராகப் பேசிவருகிறார். பகுஜன் சமாஜ் – காங்கிரஸ் உறவு எப்படி இருக்கும்?

பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எங்களுக்கு பொதுவான நோக்கம் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே உள்ளூர் நிலைமைகளுக்கேற்பச் செயல் படுகின்றன. உத்தர பிரதேசத்தில் கள நிலைமைக்கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றனர். எங்களுடைய கண்ணோட்டம் எங்களுக்கு. இதனால், எங்களுடைய நோக்கங்கள் வேறு என்று கருதிவிடக் கூடாது.

தமிழில்: ஜூரி, © இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x