Last Updated : 20 Mar, 2019 05:16 PM

1  

Published : 20 Mar 2019 05:16 PM
Last Updated : 20 Mar 2019 05:16 PM

குழந்தைகளுக்காக குழந்தைகளே  தயாரித்த தேர்தல் அறிக்கை; சிறப்பு அம்சங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத்  தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகின.

இதில் குழந்தைகளுக்கு எந்தவித தனிப்பட்ட அறிவிப்பும் இல்லாமல், ஒரு பொதுவான பார்வையிலேயே இரு கட்சிகளின் அறிக்கைகளும் இருந்தன. 

கடந்த ஐந்து வருடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் ஏராளம். அதுமட்டுமில்லாது குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பு, பெண் சிசுக்கொலை போன்றவையும் அதிகரித்து உள்ளன.  இயற்கை பேரிடர்களிலும் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச்  சூழலில் குழந்தைகளுக்கான எந்த  நல திட்டங்களும் அறிவிக்கப்படாமல் தமிழகத்தில் பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து 22 குழந்தைகள் அமைப்பின் பிரதிநிதிகளாக  61 குழந்தைகள்  (சாலையோரச் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள்,  மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,  கட்டாய இடமாற்றத்திற்கு உள்ளான குழந்தைகள், குடிபெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், மலைவாழ் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் அடங்கிய குழு ) சென்னையில் மார்ச் மாதம் 9, 10 தேதி  கூடி தங்களுக்கான எதிர்பார்ப்புகளை தேர்தல் அறிக்கைகளாக உருவாக்கினர்.

வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 40%  உள்ள குழந்தைகளும்  உள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு  இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம்  குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று குழந்தைகளுக்காக குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் யூனிசெப் மற்றும் அருணோதயா  குழந்தைகள்  தொழிலாளர் மையம் இணைந்து வெளியிட்டனர்.

இத்தேர்தல் அறிக்கையில், உயிர் வாழ்வதற்கான உரிமை, குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உரிமை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு உரிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பள்ளி மேலாண்மை, கிரம, நகர சபைகளில் குழந்தைகள் பங்கேற்கும் உரிமை, பள்ளிகளில் நிறம், சாதி, மதம் பாலின ரீதியான வேறுபாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்  ஆகியவை பிரதானமாக அடங்கி உள்ளன.

செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரிகா என்ற சிறுமி குழந்தைகளின் தேவைகள் குறித்து பேசும்போது,  ''குழந்தைகள் தயாரித்துள்ள அறிக்கையில் பெரியவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய குழந்தைகள் அமைப்புகளிருந்து இரண்டு குழந்தைகள் இதில் பங்கேற்றனர். இந்தியாவில் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இதற்கான எந்த நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கவில்லை. எனவே வருகின்ற தேர்தலில் எங்களுக்கான தேவை என்ன என்பதை இந்த அறிக்கையில் நாங்களே கூறி இருக்கிறோம்.

ஐக்கிய நாடுகளின் சபை 18 வயதுவரை உள்ளவர்கள் குழந்தைகள் என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள பல சட்டங்கள் இதனை மறுத்துள்ளன. குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மாறுபாடுகள் காணப்படுகிறது. எனவே இதில் திருத்தம் தேவை.

கூவம் போன்றவற்றில் வசிக்கும் குடும்பங்களை அரசாங்கம் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி , மருத்துவம் என  எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தீ  விபத்து எற்பட்டாலும் கூட தீயணைப்பு நிலையங்கள் இல்லை.

பெண் சிசுக்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் கிராம, நகர சபைகளில் பங்கேற்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் அவர்களிடம் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்போன்ற கோரிக்கைகள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு வாக்கு உரிமை இல்லை என்று எங்கள் கோரிக்கைகளை புறம் தள்ளாமல் இதனை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்'' என்றார்.

இதுகுறித்து அருணோதயா குழந்தைகள் தொழிலாளர் மையத்தின் நிர்வாக இயக்குனர் வர்ஜில் டி சாமி கூறும்போது, ''இந்த மாதத்தின்  தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களிருந்து வந்த  61 குழந்தைகள் ஒன்றாகக் கூடி அவர்களின் பிரச்சனைகள் என்ன தேவைகள்  என்ன?  என்பதை விவாதித்துத் தொகுத்தார்கள்.

அதனை இன்று குழந்தைகளின்  தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம்.  தமிகத்தின் இரண்டு பிரதான கட்சிகள் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் குழந்தைகளுக்காக ஏதும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெரும்  அச்சுறுத்தல் நிகழ்ந்து வருகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனைப் பற்றி அரசியல் கட்சிகள் மவுனமாக இருக்கின்றன.  குழந்தைகள் மீதான் அக்கறை குறைந்துள்ளது. இந்த சூழல்தான் தற்போது நிகழ்கிறது.

குழந்தைகளுக்காக உள்ள போக்சோ சட்டம், குழந்தைகள் திருமணம் சட்டம், தொழிலாளர்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்தச் சட்டங்களை கடுமையாகச் செயல்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் இதில் வலியுறுத்தப்பட்டது.

 

 

 

இதுவெல்லாம் நடக்க வேண்டும் என்றால் குழந்தைகளிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். இதற்காக  பள்ளிகளில் மாணவர்கள் ஆலோசனை மையம் உருவாக்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவில் குழந்தைகள் இடம்பெற வழி வகை செய்ய வேண்டும்.

இதனைக் கட்சிகள் கவனத்தில் கொண்டு இங்கிருந்து செல்லும் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்'' என்று வர்ஜில் டி சாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x