Last Updated : 15 Mar, 2019 05:28 PM

 

Published : 15 Mar 2019 05:28 PM
Last Updated : 15 Mar 2019 05:28 PM

கொங்கு மண்டலத்தில் போட்டியிடத் தயங்குகிறதா திமுக? 9 தொகுதிகளில் 6-ல் கூட்டணிக் கட்சிகள் போட்டி

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதலாக செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள 9 தொகுதிகளில் 6 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. 3 தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது.

2014-ம் ஆண்டு தேர்தலில், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 தொகுதிகளில் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பாஜக, தேமுதிக, பாமக இடம்பெற்ற கூட்டணி இரண்டாவது இடம் பிடித்தது.

மற்ற 5 தொகுதிகளில் திமுக 2-ம் இடம் பிடித்தது. எனினும், சேலம் தொகுதியில் அதிமுக 2,67,610 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைத் தோற்கடித்தது. நாமக்கல்லில் திமுகவை 2,94,374 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வீழ்த்தியது. கிருஷ்ணகிரியில் 2,06,591 வாக்குகள் வித்தியாசத்திலும், கரூரில் 1,95,247 வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுகவிடம் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

நீலகிரியில் மட்டும் வாக்கு வித்தியாசம் குறைவு. அங்கு திமுக வேட்பாளர் ஆ.ராசா 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றார்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், தனித்துப் போட்டியிட்ட அதிமுகவே பெருமளவு வெற்றி வாகை சூடியது. கொங்கு மண்டலத்தில் உள்ள 9 மக்களவைத் தொகுதிக்குப்பட்ட 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 44 இடங்களில் அதிமுக தனியாகவே வெற்றி பெற்றது. மீதமுள்ள 10 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் கோவை  தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திருப்பூர் இந்திய கம்யூனிஸ் கட்சிக்கும், நாமக்கல் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும், ஈரோடு மதிமுகவுக்கும், கரூர், மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகள் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி, சேலம், நீலகிரி தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் பலவும் அவற்றின் விருப்பத்தின் பேரிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுபோலவே கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டன. ஆனால் இந்தத் தேர்தலில் இவை அனைத்தும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x