Last Updated : 21 Mar, 2019 04:19 PM

Published : 21 Mar 2019 04:19 PM
Last Updated : 21 Mar 2019 04:19 PM

கட்சி அறிவிப்பதற்கு முன்னரே வேட்பாளரை ஆதரித்து ட்வீட் செய்தது ஏன்?- வானதி சீனிவாசன் விளக்கம்

கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே கோவை பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை அடையாளம் காட்டி ஆதரித்தது ஏன் என்பது குறித்து பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, திமுக அவற்றின் தலைமையில் இணைந்துள்ள மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் மட்டும்தான் இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை.

ஆனால், பாஜக தரப்பில் மட்டும் 5 தொகுதிகளுக்கான உத்தேசப் பட்டியல் என்று ஒன்று உலா வரத் தொடங்கியது. அதேவேளையில் கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிப்போம் என வானதி சீனிவாசன் ட்வீட் செய்தார். மற்றொரு புறம் தொலைக்காட்சி பேட்டியில் எச்.ராஜா 5 வேட்பாளர்களையும் கூறினார். கட்சித் தலைமை இருந்தும் தன்னிச்சையாக ஒவ்வொருவரும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தமிழக பாஜக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து எச்.ராஜா யூகங்கள் அடிப்படையில் கூறியது என விலகிக்கொள்ள அப்படிச் சொன்னதற்கான காரணம் என்ன விளக்கியிருக்கிறார் வானதி சீனிவாசன்.

கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே எப்படி வேட்பாளர் இவர்தான் என ஆதரித்து ட்வீட் செய்தீர்கள்?

நாங்கள் யாரும் கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், அமைச்சராக மாநிலத் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் என்னை எனது வீட்டுக்கே வந்து சந்தித்து நான் தான் கோவை வேட்பாளர் என்று கூறும்போது அவரை வாழ்த்தி ஆதரவு தெரிவிக்காமல் எப்படி இருக்க முடியும்.

அப்படித்தான் அவரை வாழ்த்தி ஆதரித்தேன். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதால் உடனே அந்த ஃபோட்டோவைப் பகிர்ந்தேன்.

நீங்கள் ட்வீட் செய்தீர்கள், எச்.ராஜா தொலைக்காட்சியிலேயே பேட்டி கொடுத்திருக்கிறார்?

அது யூகங்கள் அடிப்படையில் சொன்னது என்று அவரே சொல்லிவிட்டாரே..

தமிழக பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் இருப்பதாலேயே இப்படியான அறிவிப்புகள் வருகின்றன என்று சொல்லப்படுகிறதே?

இங்கே உட்கட்சிப் பூசல் எங்கிருந்து வந்தது. ஒரு சிறு தகவல் இடைவெளி. அந்த சிறு தவறால் நான் ட்வீட் செய்தேன். எச்.ராஜாவும் அப்படி சொல்லியிருக்கிறார். மற்றபடி பூசல் ஏதுமில்லை. பாஜக கட்டுக்கோப்பான கட்சி. தலைமைக்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சி. இது முற்றிலும் தகவல் இடைவெளியால் எழுந்த தவறு.

சி.பி.ராதாகிருஷ்ணனை ட்விட்டரில் ஆதரித்துள்ளீர்கள், மற்ற 4 வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்வீர்களா?

எங்கள் கட்சி வேட்பாளர்கள் எல்லோரையும் ஆதரிக்கிறேன். ஆனால், நான் யாருக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் எங்கு செய்ய வேண்டும் என்ற முடிவெல்லாம் கட்சித் தலைமை மேற்கொள்ளும்.

கொங்கு மண்டலத்தில் இருக்கிறீர்கள். பொள்ளாச்சி சம்பவம் பற்றி உங்கள் கருத்து? பாஜக ஏன் இப்பிரச்சினையில் பாராமுகம் காட்டுகிறது?

இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியானவுடன் மாவட்ட நிர்வாகிகள் உடனே போலீஸ் எஸ்.பி.யைச் சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். மேலும், அடுத்தடுத்த நகர்வுகளாக கைது, சிபிசிஐடி விசாரணை என வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை கட்சித் தலைமையும் கவனித்து வந்தது.  பாஜக பொள்ளாசி பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் போராட்டங்களில் ஒதுங்கி நின்றோமே தவிர இன்றளவும் பொள்ளாச்சி வழக்கை நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் பெயரின் முன்னொட்டாக சவுகிதார் என்பதை சேர்த்துக் கொண்டீர்கள்.. காங்கிரஸ் விமர்சனமும் மோடியின் இந்த முன்னெடுப்பும் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி எளிய மக்கள் முதன்மைப் பொறுப்புகளுக்கு வருவதை விரும்பாது. அது மேட்டிமைவாதம் கொண்ட கட்சி. சாமானிய மனிதர்களை காங்கிரஸ் எப்போதும் நகைப்புக்குள்ளாக்கும். அதனால்தான் எளிமையான பின்னணியில் இருந்து பிரதமர் மோடியை வெறுப்புணர்வோடு விமர்சிக்கிறது. ஆனால், அந்த விமர்சனத்தையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டவர் பிரதமர். அவர் தேசத்தின் காவலர்தான். அதனால்தான் நாங்களும் அவர் வழியில் காவலர் என்பதை அடைமொழியாகச் சேர்த்திருக்கிறோம்.

மோடி வேண்டாம் என்ற கோஷம் ஒருபுறம் ஒலிக்கிறது. மோடி வேண்டும் என்பதற்கான காரணம் ஒன்றைச் சொல்லுங்களேன்..

இந்த நாடு நல்லபடியாக இருக்க அரசாங்கம் நன்றாக நடக்க ஒரு திறமையான வலிமையான பிரதமர் வேண்டும். அதற்கு மோடிதான் மீண்டும் வேண்டும். அவரால் மட்டும்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக உருவாக்க முடியும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

]

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x