Published : 15 Mar 2019 04:12 PM
Last Updated : 15 Mar 2019 04:12 PM

சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். மதுரையில் அக்கட்சியின் சார்பில் எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான சு. வெங்கடேசன் களமிறங்குகிறார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டனர்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர். நடராஜனும், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான சு. வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளதாவது:

பி.ஆர். நடராஜன்:

கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் (வயது 68) 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

பி.ஆர்.நடராஜன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்க தலைவராக பொறுப்பேற்று மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று இளைஞர்களின் உரிமைக்காக களம் கண்டவர்.

1968-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியின் மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் முழுநேர ஊழியராக கடந்த 42 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகவும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து தலையீட்டை செலுத்துபவராகவும், கோவை மக்களின் அன்பை பெற்றவராகவும் பி.ஆர்.நடராஜன் திகழ்கிறார்.கோவை மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்.

2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஐந்தாண்டுகளில் கோவை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும், 11 ரயில்களை அறிமுகப்படுத்தவும், கோவை ரயில் நிலையத்தில் நிற்காமல் நேராக பாலக்காடு சென்ற ரயில்களை கோவை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும்கண்டார். கோவை மாவட்ட தொழில்துறையினர், வர்த்தகர் அமைப்புகள் மற்றும் கேரள மாநில மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்கப்பாதை, எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதி இவரின் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டன. பாரதியார் பல்கலைக்கழகம் அமைய நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இவரது முயற்சியின் பயனாகவே முதல் தவணை 42 கோடி ரூபாய் நிலம் கொடுத்த மக்களுக்கு பெற்றுத் தரப்பட்டது.

ரூபாய் 800 கோடி செலவிலான இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி அமையவும், கரும்பு ஆராய்ச்சி நிலைய ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் மற்றும் அரசு அச்சக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் குறிப்படத்தக்கவை.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாயையும் முழுமையாக தொகுதியில் வளர்ச்சிக்காக சமூக நலக்கூடங்கள், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மேம்பாடு உட்பட பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது.

கோவை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, நாடாளுமன்றத்தில் பேசியும், அரசிடம் எடுத்துக் கூறியும் 8 மேம்பாலங்களுக்கு ஒப்புதல் பெற்று,  ஐந்து பாலங்கள் பணி நிறைவுற்றதானது போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவுக்கு தீர்வாக அமைந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில் நுட்பம், தொழில்துறை ஆகியவற்றின் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தமிழகத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி மறைந்த கே. ரமணியின் மகள் திருமதி வனஜா இவரது துணைவியார் ஆவார்.  இத்தம்பதிகளுக்கு ஆர்த்தி, அருணா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சு. வெங்கடேசன்

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் (வயது 49), மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  கடந்த 29 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய அவர், தற்போது மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

2011-ம் ஆண்டு எழுதிய முதல் நாவலான 'காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்ததமிழ், கதைகளின் கதை, உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் தமிழ் வார இதழில் 119 வாரம் வெளியான 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்ற நாவலின் ஆசிரியரும் ஆவார். தமிழ்மொழி தொடர்பான தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்வதில் முதன்மை பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டுபாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். கட்சி நடத்திய பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருப்பவர்.

மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x