Last Updated : 04 Mar, 2019 09:58 AM

Published : 04 Mar 2019 09:58 AM
Last Updated : 04 Mar 2019 09:58 AM

காங்கிரஸுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது!- வைகோ பேட்டி

உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும்,  குரல் கொடுப்பவர் வைகோ. தேர்தல் அரசியலில் மதிமுகவுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றிகள் எதுவும் வாய்க்காத நிலையிலும், மக்கள் பிரச்சினைகளுக்காகக் களமிறங்குவதில் என்றைக்கும் தயாராக இருப்பவர்.

கூடங்குளம், ஸ்டெர்லைட், கதிராமங்கலம், முல்லை பெரியாறு, நியுட்ரினோ என்று அவரது போராட்டங்களின் பட்டியல் நீளமானது. தேர்தல்நிதியளிப்பு விழாவுக்காக திண்டுக்கல் வந்திருக்கும் அவருடன் பேசினேன்.

திராவிட இயக்கத்தினரைப் பார்த்து தேச பக்தியில்லாதவர்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்களே?

திராவிட நாடு கேட்டு போராடிக்கொண்டிருந்தபோது சீனப் படையெடுப்பு பற்றி அறிந்ததும்,  “வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்?” என்று சொல்லி, அந்தக் கோரிக்கையைக் கைவிட்டவர் அண்ணா. வங்கதேச யுத்தம் நடந்தபோது, மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தைவிட, இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களையும்விட மிக அதிகமான பாதுகாப்பு நிதி வசூலித்துக் கொடுத்தவர் மு.கருணாநிதி.  இந்த நாட்டுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் நாட்டைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கவும், உடமையைக் கொடுக்கவும் முன்னின்றவர்கள் தமிழர்களும், தமிழகமும்தான் என்பது தேர்தல் நேர தேச பக்தர்களுக்குத் தெரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை.

பாஜகவினர் உங்களைப் பற்றி “இதே வைகோ திமுகவை எப்படியெல்லாம் விமர்சித்தார்?” என்று கேட்கிறார்களே?

நாங்கள் அண்ணன் தம்பிக்குள் அடித்துக்கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை அழிக்கலாம் என்று வெளியாட்கள் யாரேனும் வந்தால் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம். திண்டுக்கலில் நடைபெறும் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தார்கள் பாஜகவினர். தகவலைக் கேள்விப்பட்டதும் நான் தங்கியிருக்கிற விடுதிக்குப் படையென திரண்டுவந்துவிட்டார்கள் திமுக தோழர்கள்.  நாங்கள் எவ்வளவு சகோதர பாசத்தோடு இருக்கிறோம் என்பதற்கு இதோ என் பக்கத்தில் அரணாக அமர்ந்திருக்கும் திமுக தோழர்களே சான்று.

இலங்கை பிரச்சினை தொடங்கி முல்லை பெரியாறு வரை நீங்கள் எதிர்த்துப் போராடிய காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறீர்களே?

காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்தால் இந்தியா ஒன்றாக இருக்காது. நவகாளியில் நடந்த ரத்தக்களறி நாடு முழுக்க நடந்துவிடாமல் தடுக்கக்கூடிய தோழமை சக்தியாக காங்கிரஸைப் பார்க்கிறோம். “மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்து கூட்டாட்சி தத்துவத்தை ஏற்படுத்தினால்தான், இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்” என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். இந்த மனோபாவம் இன்று காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டது.

ஒவ்வொரு தொகுதியையும் தேர்தல் ஆணையமே ஏலத்தில் விட்டுவிடலாம்  என்று சொன்னவர் நீங்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள்?

கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் அதிகமாக பணம் கொடுப்பார்கள். தடுக்க ஆளே கிடையாது. ஆனால், மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பணத்தால் ஒருபோதும் மட்டுப்படுத்த முடியாது.

மத்திய ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தபோது நழுவவிட்ட கட்சி மதிமுக. இம்முறை வாய்ப்பு வந்தால்?

(சிரிக்கிறார்) மத்தியில் கேபினட் பதவி தருவதாக இரண்டு முறை வற்புறுத்தப்பட்ட போதெல்லாம் மறுத்தவன் நான். மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளில் இருந்து, கீழே இருக்கிற தொண்டர் வரையில் என்னுடன் இப்போது இருக்கிற தம்பிகள் எல்லோருமே என்னைப் போலவே லட்சியப் பிடிப்போடும், தியாக மனப்பான்மையுடனும் இருப்பவர்கள். எங்களுக்கு இந்த ஆசையோ, கேள்வியோ வரவே வராது!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x