Last Updated : 23 Mar, 2019 09:48 AM

 

Published : 23 Mar 2019 09:48 AM
Last Updated : 23 Mar 2019 09:48 AM

கூட்டணி அரசியலுக்குத் தொடக்கப் புள்ளி

மாநிலக் கட்சிகள் செல்வாக்கு பெறத் தொடங்கியது 1967-ல் நடந்த நான்காவது பொதுத் தேர்தலின்போதுதான். இந்தத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் 283 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும், முந்தைய தேர்தலைவிட 78 தொகுதிகளை இழந்திருந்தது. தேசிய அளவில் சுதந்திரா கட்சி வளர்வதுபோலத் தோன்றியது. 44 மக்களவைத் தொகுதிகளில் வென்று அதிக இடங்களில் வென்று சுதந்திரா கட்சி எதிர்க்கட்சியானது. காங்கிரஸுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டின. மாநிலக் கட்சிகள் இதில் முக்கியப் பங்கு வகித்தன. தமிழ்நாட்டில் திமுக அமைத்த வானவில் கூட்டணி கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரா, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இடதுசாரி, வலதுசாரி கட்சிகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் அண்ணாவைப் போல வட இந்தியாவில் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒரே கூட்டணியில் சேர்க்கும் பரிசோதனையை சோஷலிஸ்ட்டுகளும் மேற்கொண்டனர். சம்யுக்த விதாயக் தள் எனும் பெயரில் கூட்டணி ஆட்சியின் பரிசோதனை முறை உருவானது.

1961-1966 ஐந்தாண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 5.6% ஆக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2.4% அளவுக்குத்தான் வளர்ச்சி இருந்தது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அரிசி பற்றாக்குறை, மாநிலங்களின் உரிமைக் குரல் போன்ற காரணங்களால் காங்கிரஸின் செல்வாக்கு தேயத் தொடங்கியது. 1962-ல் நிகழ்ந்த சீன ஊடுருவல், 1965-ல் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர் ஆகியவற்றால் நாட்டுக்குத் தாங்க முடியாத பொருளாதாரச் சுமை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிரதமர் இந்திராவுக்கும் துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகமாயின. இவை அனைத்தும் தேர்தலில் எதிரொலித்தன.

தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 179 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என்று பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தன. திமுக தலைமையில் ராஜாஜியின் சுதந்திரா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திரண்டு காங்கிரஸ் அரசை வீழ்த்தின. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் இப்போதுவரை தமிழ்நாட்டைத் தங்களுடைய  பிடியிலிருந்து நழுவவிடவில்லை.

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x