Last Updated : 26 Mar, 2019 06:21 AM

 

Published : 26 Mar 2019 06:21 AM
Last Updated : 26 Mar 2019 06:21 AM

பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள்- சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் முனவரி பேகம் நம்பிக்கை

முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இத்தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய துணைத் தலைவர் முனவரி பேகம் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு முனவரி பேகம் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நீங்கள் பாஜகவில் இணைந்தது ஏன்?

மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது பாஜக வில் சிறுபான்மையினர் மிகவும் மரியாதை யாக நடத்தப்படுகின்றனர். சிறுபான்மை யினரை பாஜகவினர் நடத்தும் விதம் பிடித்ததால் பாஜகவில் இணைந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான், 24 வயதில் பாஜகவில் உறுப்பின ராக சேர்ந்தேன். வேறு கட்சிகளில் இருந்ததில்லை.

பாஜகவில் இணைந்ததால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டீர்களா?

எங்கள் சமுதாய அமைப்புகளால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. முக்கால் மணி நேரத்துக்குள் 75 தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில்தான் இருக்கிறேன். ஆனால், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருமே பாஜகவில்தான் உள்ளனர்.

கட்சிப் பணிகள் குறித்து..

கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே மகளிர் அணி மண்டல் தலைவரானேன். இளைஞர் அணி, மகளிர் அணி, சிறு பான்மையினர் பிரிவு ஆகியவற்றில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். தற்போது, பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய துணைத் தலைவராகவும், மத்திய வக்ஃபு கவுன்சில் உறுப்பினராகவும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறேன். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது என 5-க்கும் மேற்பட்ட மொழிகள் தெரியும். 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன். கட்சிப் பணிக்காக தமிழ கத்தில் நான் போகாத இடமே இல்லை.

தேர்தலில் போட்டியிட்டது பற்றி..

‘தேர்தலில் போட்டியிட சிறுபான்மை யினருக்கு பாஜக வாய்ப்பு அளிக்காது’ என்று தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துவந்தனர். அதை முறியடிப்ப தற்காகவே 2006 சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணகிரியில் போட்டியிட்டேன். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் கிடையாது. இருப்பினும், பாஜக பற்றிய பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவே போட்டியிட்டேன். என் வாழ்நாள் முழுவ தும் நாட்டு நலனுக்காக பாஜக மூலம் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்.

வாஜ்பாய் ஆட்சி - மோடி ஆட்சி பற்றி என்ன கருதுகிறீர்கள்?

வாஜ்பாய் ஒரு நல்ல குரு. அவர் உருவாக்கியதுதான் இப்போது வரை பாஜக ஆட்சியில் தொடர்கிறது. அவரது தங்க நாற்கர சாலைத் திட்டம் இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் பேசப்படும். ஏற்கெனவே அணுகுண்டு தயாரித்து வைத்திருந்தாலும், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்படவில்லை. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு, நாட்டின் வலிமை உலக அரங்கில் பறைசாற்றப்பட்டது.

அவரது வழியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, குருவை மிஞ்சும் சிஷ்யனாக ஆட்சி செய்து வருகிறார். இதுவரை 163 மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். புல்வாமா தீவிர வாத தாக்குதலுக்கு துல்லிய தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது மிகவும் சிறப்பு. இப்போதைய சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்.

முத்தலாக் அவசர சட்டத்தால் பாஜக வுக்கு முஸ்லிம் பெண்களின் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று கருதுகிறீர்களா?

உலகில் உள்ள 63 இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் உட்பட 28 நாடுகளில் முத்தலாக் நடைமுறை இல்லை. இந்தியாவில் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இத்தேர்தலில் பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x