Published : 16 Mar 2019 11:21 AM
Last Updated : 16 Mar 2019 11:21 AM

8 மாவட்டங்களைக் கொண்ட மத்திய மண்டலத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடி போட்டி: அடுத்தடுத்த தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்ததால் அதிருப்தி

எட்டு மாவட்டங்களைக் கொண்ட மத்திய மண்டலத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக போட்டியிடுகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர் என அடுத்தடுத்துள்ள 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்ததால் திமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீட் டின்படி மத்திய மண்டலத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிடுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. திருச்சி, கரூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியும், நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளன.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியபோது, “கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்ததில் தவறில்லை. ஆனால், இந்தளவுக்கு தேவையே இல்லை. திருச்சி, கரூர், பெரம்பலூர் என அடுத்தடுத்துள்ள 3 தொகுதிகள் கூட்டணிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள அரியலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. ஒரு பெரும் பகுதியையே கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டதால் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் என 5 மாவட்டங்களிலுள்ள திமுக தொண்டர்களிடம் அதிருப்தியும், மனச் சோர்வும் காணப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் மத்திய, மாநில அரசுகளின் மீது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நிலவும் அதிருப்தியை வாக்குகளாக மாற்றினால், மத்திய மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியும். எனவே, இத்தொகுதிகளில் மனச்சோர்வுடன் உள்ள திமுகவினரையும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையிலான பணிகளை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புண்டு” என்றனர்.

இதுகுறித்து திமுக இலக்கிய அணி நிர்வாகி ஒருவர் கூறியபோது, "திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உள்ளனர். மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கொள்கைப் பரப்புச் செயலாளர் களின் சொந்த மாவட்டத்திலேயே திமுக களமிறங்காதது வேதனைக் குரியது.’’ என்றார்.

வெற்றிக்கு பெரிய சவால் தேவையில்லை

‘‘காவிரி நீர் பங்கீடு பிரச்சினைக்குத் தீர்வு காணாதது, கஜா புயல் பாதிப்பு நிவாரணம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையாக போய்ச் சேராதது, படைப்புழு தாக்கிய மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணத்தொகை வெறும் அறிவிப்புடன் நின்றுபோனது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிப்பது போன்ற மிக முக்கியமான பல்வேறு பிரச்சினைகள் மத்திய மண்டலத்தில் வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன.

இந்தச் சூழலில் பிரதான எதிர்க்கட்சியான திமுக இப்பகுதியில் கவனம் செலுத்தினால் பெரிய சவால் இல்லாமல் வெற்றிக்கனியை பறிக்க முடியும். ஆனால், ஏனோ தனக்கு வெற்றியை எளிதாக அள்ளித்தரும் இத்தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்திருக்கிறது’’ என மத்திய மண்டலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x