Published : 25 Mar 2019 03:12 PM
Last Updated : 25 Mar 2019 03:12 PM

25 ஆயிரம் நமோ போராளிகள்: இணையத்தை உலுக்கும் பாஜக

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியும் இடைவிடாது சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு கட்சியும் பதிலடி கொடுத்து வருகின்றன. மீம்ஸ், புகைப்படங்கள், தகவல்கள், வீடியோக்கள் என பல்வேறு விதங்களில் சமூக வலைதள அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுக்க எந்நேரமும் தயாராக உள்ளனர்.

இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத்திலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பலம் பொருந்தியதாக கருதப்படும் கட்சி பாஜக. பல கட்சிகளும், தலைவர்களும் சமூக வலைதளத்தின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்கு முன்பே அதன் நாடியை அறிந்துகொண்ட கட்சி பாஜக.

பிரதமர் மோடி தொடங்கி சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், தமிழகத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ட்விட்டரில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

தமிழக பாஜக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமூக வலைதளம் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில், எத்தகைய பங்கு வகிக்கிறது, என்ன மாதிரியான புதிய வியூகங்களை வகுத்துள்ளது என்பதைக் காண்போம்.

சமூக ஊடகப் பிரிவு அணி மட்டுமல்லாமல், இந்தத் தேர்தலுக்கு 'நமோ வாரியர்ஸ்' (நமோ போராளிகள்) என்ற பெயரில், பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் திட்டங்கள் மூலம் கவரப்பட்ட தன்னார்வலர்களை இணைத்து சமூக வலைதளங்களில் தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது தமிழக பாஜக.

இந்த மக்களவைத் தேர்தலுக்கு தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி எப்படி தயாராகி வருகிறது, 'நமோ வாரியர்ஸ்' என்றால் யார், அவர்களின் பணி என்ன என்பது குறித்து, தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் மாநில அமைப்பாளர் நிர்மல் குமாரிடம் பேசினோம்.

'நமோ வாரியர்ஸ்' என்பவர்கள் யார்? அவர்களின் பணி என்ன?

'நமோ வாரியர்ஸ்' பிரதமர் மோடியின் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள். பாஜகவின் கீழ் இயங்காமல், விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி (பாஜகவின் மாணவர் அணி) உள்ளிட்ட அமைப்புகளில் உள்ளவர்கள், புதிய வாக்காளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் தன்னார்வலர்களாக 'நமோ வாரியர்ஸ்' என்ற பெயரில் தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொள்ள தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 500 'நமோ வாரியர்ஸ்' உள்ளனர். இதற்கென தனியாக இணையதளம் உள்ளது. பாஜக 51 மாவட்ட அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு 25 ஆயிரம் 'நமோ வாரியர்ஸ்' உள்ளனர். இதில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேர் செயல்பாட்டில் உள்ளனர்.

சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சுமார் 3 ஆயிரம் பேர் இருக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் இவர்கள் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கான தகவல்களை தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் வழங்குவர்.

இவர்களுக்கு என்னென்ன மாதிரியான வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன?

முதலில் அவர்கள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை உடனுக்குடன் முறியடிக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக நிறைய பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்களின் நன்மைகள், எத்தனை பேரைச் சென்றடைந்துள்ளது என்பதை தகவல்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். 'நமோ வாரியர்ஸ்' அனைவருமே எங்களின் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 50 பேர் அடங்கிய பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய குழுவினர் தகவல்கள் அளிப்பர். தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மால்வியா எங்களை வழிநடத்துகிறார்.

ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தல், வீடியோக்கள் என நாங்கள் தரும் தகவல்களை அவர்கள் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் மூலம் பரப்ப வேண்டும். பிரதமர் மோடி தமிழகம் வருவது போன்ற முக்கியமான நாட்களில் 75% பேர் செயல்பாட்டில் இருப்பர். இந்த தன்னார்வலர்களுக்கு நாங்கள் பணம் கொடுப்பது இல்லை. சுமார் 650-700 முகநூல் பக்கங்களை நிர்வகித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு 6,000 வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 70 தகவல்கள் வரை கொடுப்போம். இத்தனை பக்கங்களில் நாங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றைப் பகிரும்போது சாதாரணமாக 50 லட்சம் பேரை எங்களால் சென்றடைய முடியும்.

பாஜகவின் வேட்பாளர்களுக்காக சமூக வலைதள அணி எத்தகைய பிரச்சார யுக்திகளைக் கையாளுகிறது?

5 தொகுதிகளுக்கென சமூக வலைதளங்களில் பணியாற்றும் முதன்மை அணியில் 35 பேர் உள்ளனர். நேரலை வீடியோக்கள் பதிவிடத் திட்டமிட்டிருக்கிறோம். தூத்துக்குடியில் திமுகவின் ஊழல்கள் குறித்தும், கன்னியாகுமரியில் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்வோம். சிவகங்கையில் பல ஆண்டுகள் காங்கிரஸ் இருந்தும் தொழில் மேம்பாடு அடையவில்லை என்பதை வெளிப்படுத்துவோம். செல்வ மகள் திட்டம், உஜ்வாலா திட்டம் உட்பட மத்திய அரசின் பல திட்டங்களுக்கு தமிழகத்தில் ஒரு கோடி பயனாளிகள் உள்ளனர். இதனை விளக்கும் வகையில் 1,000 வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் தினம்தோறும் 10-20 என வெளியிட்டு வருகிறோம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு, துப்பாக்கிச் சூடு, அதேபோன்று எச்.ராஜாவின் பல கருத்துகளுக்காக விமர்சனங்கள் உள்ளதே? தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிரான மனநிலை தானே நிலவுகிறது?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்படும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்களை திசை திருப்பியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 25 ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களின் நிலைமையை எடுத்துச் சொல்லும் வகையிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

பாஜக ஆதரவாளர்கள் நிறைய போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் உள்ளனர்? அவர்கள் தான் எதிர்க்கட்சிகளுக்கு எதிரானவற்றை டிரெண்ட் செய்வதாக விமர்சனம் உள்ளதே?

ட்விட்டரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க குறைந்தபட்சம் 20 ஆயிரம் ட்வீட்டுகள் தேவைப்படும். அத்தனை கணக்குகளைப் போலியாக உருவாக்க முடியாது. கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவரை வரவேற்று 7 லட்சம் ட்வீட்டுகள் டிரெண்ட் செய்தோம். அவையனைத்தும் போலி ட்வீட்டுகளா? 'GO BACK MODI' முழக்கத்தை விட வரவேற்ற ட்வீட்டுகள் தான் அதிகம் இருந்தன. டிரெண்டிங் குறிப்பிட்ட கால அளவில் மாறும். ஆனால், எத்தனை ட்வீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், மோடியை வரவேற்கும் ட்வீட்டுகள் தான் அதிகம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 'GO BACK PAPPU' எனவும், அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றும் சித்தரித்து சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது தவறான அணுகுமுறை தானே? சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் இழிவாகவும் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் நடக்கிறது. இதை பாஜக ஆதரிக்கிறதா?

அப்படி டிரெண்ட் செய்பவர்கள் பாஜகவினரோ, சமூக வலைதள அணியைச் சேர்ந்தவர்களோ அல்ல. தனிப்பட்ட ஆதரவாளர்கள். பிரதமர் மோடியையும், தமிழிசையையும் எதிர்க்கட்சியினர் அவ்வளவு தரக்குறைவாக விமர்சித்திருக்கின்றனர். அதற்கு ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்கின்றனர். ஆனால், அப்படி செய்யக்கூடாது என நாங்களும் சொல்வோம். பத்திரிகையாளர்களை பாஜகவினர் தாக்கவில்லை. அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் சமூக வலைதளங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என நினைக்கிறீர்கள்? அதன் மூலம் வாக்குகளை அதிகரிக்க முடியும் என கருதுகிறீர்களா?

கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தன்னார்வலர்களுக்கென கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். இந்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டங்கள் நடத்த உள்ளோம். அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு களத்திலும், சமூக வலைதளங்களிலும் நாங்கள் தான் பெரிய அளவில் துணையாக இருக்கிறோம். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக கவனம் இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அவர்களின் மனநிலையை சமூக வலைதளம் மூலம் தீர்மானிக்க முடியும்.

இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்தார்.

பாஜகவின் 'நமோ வாரியர்ஸ்' இந்தத் தேர்தலுக்கு மட்டுமின்றி தமிழக பாஜகவுக்காக நிரந்தரமாக சமூக வலைதளத்தில் செயலாற்றுவார்கள் என, மாநில பொதுச் செயலாளரும், சமூக வலைதள அணியின் பொறுப்பாளருமான கே.டி.ராகவன் தெரிவிக்கிறார்.

"நமோ வாரியர்ஸ் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவர்கள் தேர்தலுக்காக மட்டுமல்ல, தமிழக பாஜகவுக்கு சமூக வலைதளங்களில் நிரந்தரமாக அவர்கள் செயலாற்றுவர். சமூக வலைதளங்களில் அவர்கள் போராளியாக இருப்பர். கடந்த தேர்தலை விட மிகத்தீவிரமாக டிஜிட்டலில் இயங்கி வருகிறோம். இந்தியாவில் தமிழகத்தில் தான் பாஜகவுக்கு இத்தகைய 'நமோ வாரியர்ஸ்' உள்ளனர்" என தெரிவித்தார்.

தமிழக பாஜக சமூக வலைதள அணி போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்வதாகவும் விமர்சனம் உள்ளது. சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் துறைமுகம் கொண்டு வருவதாக கூறியதாக தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் அவ்வாறு கூறவில்லை என தெரியவந்ததையடுத்து அப்புகைப்படம் நீக்கப்பட்டது.

இத்தகைய தவறான தகவல்கள் பகிரப்படுவது குறித்து பதிலளித்த கே.டி.ராகவன், "சில சமயங்களில் அப்படி நடக்கிறது. ஆனால், உடனடியாக அதனை நீக்கி விடுவோம்", என்றார்.

தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் உள்ள எதிர்ப்பு மனநிலை குறித்து நம்மிடம் பேசிய சமூக வலைதள மாநிலச் செயலாளர் பாலாஜி, "சமூக வலைதளத்தில் பாஜகவுக்கு உள்ள பலம் மற்ற எதிர்கட்சிகளுக்கு இல்லை. மோடி எதிர்ப்பில் இருப்பவர்கள் ஒன்றாக இணைந்து 'GO BACK MODI' உள்ளிட்டவற்றை டிரெண்ட் செய்வதால், எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. பிரதமருக்கு எதிரான மனநிலையில் சுமார் 20 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பர்" என்கின்றார்.

ஆனால், பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் 'GO BACK MODI' என்ற முழக்கம் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டாகி வருகிறது. இதனை, பாகிஸ்தானில் உள்ளவர்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் டிரெண்ட் செய்வதாக பாலாஜி தெரிவித்தார்.

ஆனால், 'GO BACK MODI' ட்வீட்டுகள் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே வருவதாக ட்விட்டரில் பிரபலமான ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் என்பவர் ஆய்வு செய்ததில், மோடிக்கு எதிரான 'GO BACK MODI' பிரச்சாரம் தமிழ்நாட்டிலேயே செயல்படுத்தப்பட்டது என்று தரவுகளுடன் நிரூபித்தார்.

மேற்குறிப்பிட்டுள்ள ஹரி பிரபாகர், பத்திரிகையாளர் குறித்து இழிவான சொற்களைக் கூறியதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது பாஜக ஆதரவாளராக உள்ளார். பிரதமர் மோடியால் ட்விட்டரில் பின் தொடரப்படுவதாக பெருமைகொள்ளும் இவரை சமீபத்தில் மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாஜகவின் தலைவர்கள் மட்டுமின்றி, ஆதரவாளர்களும் மோடி முன்னெடுத்த 'சவ்கிதார்' - அதாவது 'நானும் நாட்டின் காவலர்' என்ற பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, வரும் 31 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். எனினும், ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது உட்பட பலவற்றை மேற்கோளிட்டு இந்த பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரமும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x