Published : 19 Mar 2019 11:38 AM
Last Updated : 19 Mar 2019 11:38 AM

நீட் தேர்வு ரத்து; எழுவர் விடுதலை; மாநிலப் பட்டியலில் கல்வி; வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும்.

* வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைந்திட, மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சமில்லாமலும் நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.

* மத்திய நிதிக்குழுவின் அமைப்பும், பணிகளும், மாநிலங்களின் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.

* மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

* தொழிலாளர்  ஓய்வூதியத் திட்டம் 1995-ன்படி, குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்படும்.

* பாஜக அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ,1,50,000 ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெட்ரோலிய எரிபொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க நிர்ணயிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும்.

* சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்தது போல சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் கிராமப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

* தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.

* 10 ஆம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

* கிராமப்பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

* 1964 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தம்படி இந்தியாவுக்குத் திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் மேலும், தாமதமில்லாமல் இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்.

* நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்கவரி உரிமம் முடிந்த பின்னரும் வசூலிக்கப்படும் சுங்க வரிக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரயில் பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.

* சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நகரங்களான மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும்.

* கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும். அங்கு கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* கஜா போன்ற கடும் நிவாரண நிதிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் அரை சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.

* புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் ஏற்படுத்தப்படும்.

* இயற்கை சீற்றத்திலிருந்து கடலோர மக்களை பாதுகாக்க புதிய சட்டம்.

* கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

*சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் கொண்டுவரப்படும்.

* காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்

* மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வலியுறுத்தல்

* 100 நாள் வேலைவாய்ப்பில் விவசாயிகளுக்கு விவசாய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு என்பது 150-ஆக உயர்த்தப்படும்.

* மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

* சேது சமுத்திரம் திட்டப் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* அனைத்து மதங்களின் மாண்பை பாதுகாக்க தக்க நடவடிக்கை

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக வலியுறுத்தல்

* கேபிள் டிவி கட்டணம் முந்தைய விலைக்கு குறைக்கபடும்

* மனித கடத்தலை தடுக்க புதிய சட்டம்

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

* ஏழை விவசாய பொருளாதாரத்தை பாதுகாக்க இலவச மின்சாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x