Published : 19 Mar 2019 06:08 PM
Last Updated : 19 Mar 2019 06:08 PM

திமுக - அதிமுக தேர்தல் அறிக்கையின் பொதுவான அம்சங்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் இன்று அடுத்தடுத்து வெளியிட்டன.

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, எழுவர் விடுதலை வலியுறுத்தல் என்று இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் சில பொதுவான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்விக் கொள்கை

திமுக

நீட்  தேர்வு ரத்து செய்யப்படும்.

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக

பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை, மாநில அரசின் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்த விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தல்.

கல்விக்கடன் தள்ளுபடி: நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மாணவர்கள் கல்விக் கடனைத் திரும்ப செலுத்த இயலாமல் தவித்து வருகிறார்கள். எனவே, மாணவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் பெற்ற கல்விக் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க நடவடிக்கை.

பொருளாதாரக் கொள்கை

திமுக

பாஜக அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

அதிமுக

தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு மத்திய அரசு தனித்தன்மையுள்ள சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டுமெனவும், அத்திட்டங்களை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும். 

நெசவாளர் நலன்

திமுக

வறுமைக்கோட்டில் உள்ள நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

அதிமுக

கைத்தறி தொழில்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கைத்தறித் தொழில் வளர்ச்சி மிகவும் நலிவடைந்துவிட்டதால், கைத்தறி நெசவாளர்களின் நலன் காக்க கைத்தறி உற்பத்தி இனங்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

நதிநீர் இணைப்பு

திமுக

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக

இந்திய நதிநீர் வழித்தடங்கள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவதுடன், இத்திட்டத்தை முழுமையான அளவில் நிறைவேற்றிட அதிமுக வலியுறுத்தும்.

வேளாண்மை-விவசாயிகள் நலன்

திமுக

வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

அதிமுக

வேளாண்மை-விவசாயிகள் நலன்

சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய ஓர் உறுதியான கொள்கையை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அதிமுக வலியுறுத்தும்.

ஏழு பேர் விடுதலை

திமுக

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக வலியுறுத்தல்

அதிமுக

இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவாறும், தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தவாறும், 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x