Published : 03 Mar 2019 09:05 AM
Last Updated : 03 Mar 2019 09:05 AM

தேர்தலில் நிற்பவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: உடனே அமலுக்கு வருகிறது

100% அக்மார்க் கற்பனை செய்தி

‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இத்தேர்தலில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று தெரிகிறது.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் பற்றி பேசினால், உடனே காமராஜரையும் கக்கனையும் சாட்சிக்கு வைத்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.

அந்த பாச்சா இந்த முறை பலிக்கவில்லை. ‘நீட்’, ‘டெட்’, ‘ஐஐடி’ போல தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதையொட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் என்பதுபோல, ‘மக்கள் பிரதிநிதிகள் தேர்வாணையம்’ என்ற அமைப்பும் தொடங்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் பின்பற்றும் தேர்தல் நடைமுறைகளில் மிகுந்த அறிவும், அனுபவமும் வாய்ந்த ‘கருப்பு மச்சம்’ கபாலி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது ‘வெளியே’ இருக்கும் அனைவரும் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள். வரும் கல்வியாண்டில் விடுதலை ஆகிறவர்கள், ஜாமீனில் வெளியே வருபவர்களும் எழுதலாம். இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். கும்பலோடு இருக்கும் புகைப்படம் ஏற்கப்படாது. வயது, அனுபவம், கல்வித் தகுதி என்ன வேணாலும் இருந்துட்டுப் போகட்டும்.

பூவத்தூர் ரிஸார்ட்ஸில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்களே நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும். பினாமிகள் அனுமதி இல்லை. கத்தி, கப்டா, கட்டிங்பிளையர், பிளேடு, பிச்சுவா போன்ற உபகரணங்கள் தேர்வு வளாகத்துக்குள் அனுமதி இல்லை.

வினாத்தாள், கூடுதல் விடைத்தாள் வாங்குவதற்காக அறை கண்காணிப்பாளரை முற்றுகையிடுவதோ, அவரை சுற்றி நின்று கெரொ செய்து கூச்சல், குழப்பம் செய்வதோ, பேப்பரை கிழித்து அவர் தலையில் போடுவதோ கூடாது. இவ்வாறு கேவலமாக நடந்துகொள்பவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி குப்பைத் தொட்டியில் வீசப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாதிரி வினாத்தாள் நாளை..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x