Last Updated : 30 Mar, 2019 08:46 AM

 

Published : 30 Mar 2019 08:46 AM
Last Updated : 30 Mar 2019 08:46 AM

இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்

பதினோராவது மக்களவைத் தேர்தல் 1996-ல் நடந்தது. மத்திய அரசின் மீதான ஊழல் புகார்கள், உள்கட்சிப் பூசல்கள் காரணமாக காங்கிரஸ் செல்வாக்கிழந்தது. அக்கட்சிக்கு 140 தொகுதிகளே கிடைத்தன. பாஜக 161 தொகுதிகளில் வென்றது. ஜனதா தளம் 46, சமாஜ்வாதி 17, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளில் வென்றன. இடதுசாரி முன்னணி 52 தொகுதிகளில் வென்றது. தமாகா 20, திமுக 17, பகுஜன் சமாஜ் 11, அனைத்திந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) 28 இடங்களில் வென்றன.

அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற வகையில் பாஜக ஆட்சியமைக்க அழைக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். அந்த ஆட்சி 13 நாட்களே நீடித்தது. பிற கட்சிகள் கொள்கை முரண்பாடுகள் காரணமாக ஆட்சியமைக்க ஆதரவு தரவில்லை. எனவே வாஜ்பாய் பதவி விலகினார். ஆட்சியமைக்க காங்கிரஸ் மறுத்தது. எனினும் ஐக்கிய முன்னணி அரசு அமைக்க அக்கட்சி ஆதரவு அளித்தது. கருணாநிதியின் பெயர் உச்சரிக்கப்பட்டபோது அவர் தேவ கவுடாவை முன்மொழிந்தார். தேவ கவுடா பிரதமர் ஆனார்.

அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் தங்களிடம் ஆலோசிக்காமலேயே முக்கிய முடிவுகளை எடுப்பதாக அதிருப்தி தெரிவித்தது காங்கிரஸ். அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாகவும் எச்சரித்தது. இதையடுத்து, தேவ கவுடாவை நீக்கிவிட்டு ஐ.கே.குஜ்ராலைப் பிரதமராகத்

தேர்ந்தெடுத்தனர். அந்த அரசையும் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரித்தது.  இந்தச் சூழலில், லாலு பிரசாத் மீதான கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டு வெடித்தது. தனக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்ததும் கட்சியை உடைத்த லாலு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மக்களவையில் இருந்த 45 ஜனதா தள உறுப்பினர்களில் 17 பேர் லாலு கட்சியில் இணைந்தனர். தன்னாலான அளவுக்கு ஒரு நல்லாட்சிக்கு முற்பட்டார் குஜ்ரால்.

ராஜீவ்காந்தி படுகொலையில் தொடர்பு இருப்பதாக புலன் விசாரணை அமைப்பு அளித்த தகவலையடுத்து கூட்டணி அரசிலிருந்து திமுகவை நீக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்காததால், குஜ்ரால் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. அடுத்த தேர்தல் வந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x