Published : 28 Mar 2019 11:26 AM
Last Updated : 28 Mar 2019 11:26 AM

திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருமாறு ராமதாஸ் என்னிடம் கூறினார்: திருமாவளவன்

கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியை விட்டு விலகி வருமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தம்மை அழைத்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அரசியல் அடையாளத்தை தாம் தான் கொடுத்ததாகவும், அது தான் செய்த தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தொல்.திருமாவளவன், "சில ஆண்டுகளுக்கு முன்பாக, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸ் தன் கையால் உணவு பரிமாறினார். உணவருந்திய பிறகு, வரவேற்பறையில் எங்களை அமர வைத்து ஒரு மணிநேரம் பேசினார். அந்த ஒரு மணிநேரமும் திமுக குறித்து தான் ராமதாஸ் பேசினார். திமுக மற்றும் கருணாநிதியால் தான் நாடே குட்டிச்சுவராகி விட்டது எனவும், அனைவரையும் குடிகாரர்களாக்கி விட்டனர் எனவும், ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ராமதாஸ் சொன்னார்.

'நீ ஒரு ஆள் தான் கலைஞருடன் ஒட்டிக் கொண்டிருக்கிறாய். நீ வெளியே வந்துவிட்டால் சரியாகிவிடும்' என்றார். கடந்த 2009 மக்களவை தேர்தல், 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்து நான் வெளியே வந்துவிட வேண்டும் என்றும் கூறினார். அப்போது தான் திமுக ஒழியும் என்று ராமதாஸ் தெரிவித்தார். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை ஒழித்துவிட வேண்டும் என்றும் சொன்னார். விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் தருவதாகவும், ஆனால், திமுக அப்படி தராது எனவும் கூறினார்"

இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x