Published : 30 Mar 2019 08:54 AM
Last Updated : 30 Mar 2019 08:54 AM

ஜாதிச்சான்று, நிலப்பட்டா உள்ளிட்ட மலைக்கிராம மக்களின் கோரிக்கைகள் தேர்தலில் எதிரொலிக்குமா?

மலையாளி சமுதாயத்தை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், மலைப்பகுதி விளை நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட மலைக் கிராம மக்களின் கோரிக்கைகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கடம்பூர், குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம் ஊராட்சிகள், தாளவாடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகள் நீலகிரி மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள மலைப்பகுதி கிராமங்களாகும். அதேபோல், அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சியில் உள்ள 33 கிராமங்கள் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இரு தொகுதிகளிலும் உள்ள மலைப்பகுதிகளில், ஒரு லட்சம் வாக்காளர்கள் வரை வசிக்கும் நிலையில், தேர்தல் காலங்களில் மட்டும் இவர்களது கோரிக்கைகள் கவனம் பெற்று வருகின்றன.

கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் மலையாளி வகுப்பைச் சேர்ந்த 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி வகுப்பினர் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்று அதற்கான ஜாதிச்சான்றினைப் பெற்றுள்ளனர். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி இன மக்கள் இதுவரை பழங்குடியினர் எனும் சான்றினைப் பெற முடியாததால், எவ்வித சலுகைகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பழங்குடி மக்கள் சங்க அமைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது:

தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 36 வகையான பழங்குடியின பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின சான்று பெற வேண்டுமானால், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செயல்படும் தமிழ்நாடு பழங்குடியினர் ஆய்வு மையம் அதற்கு சான்றளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி இனத்தவருக்கு பழங்குடியினர் என சான்றளிக்கலாம் என இந்த மையம் பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும், அதற்கான சட்டத்திருத்தம் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என்பதால், இந்த பகுதியில் வசிக்கும் மலையாளி இனத்தவர், கல்வி உள்பட அரசின் எந்த சலுகையையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் மலையாளி இனச்சான்று பெற்றுத்தர உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே இவர்களின் வாக்கு கிடைக்கும் சூழல் உள்ளது, என்றார்.

பட்டா இல்லை

இதற்கு அடுத்தாற்போல் மாநில அரசின் வருவாய்த்துறை சார்ந்த பட்டா விவகாரம் முன்னிலை பெற்று நிற்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து, மலைப்பகுதியில் விவசாயம் மேற்கொள்வோர் குறித்து, 1989-ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி மலைப்பகுதியில் உள்ள வருவாய்த்துறை நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதோடு, மலைப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு பட்டா வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் வருவாய் புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா கிடைக்காத நிலை உள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்திய மங்கலம் ஒன்றியச் செயலாளர் நடராஜ் கூறியதாவது:

நீலகிரியில் மலைச்சரிவில் விவசாயம் மேற்கொள்வதால், அங்கு நிலச்சரிவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதியில் மலைச்சரிவில் யாரும் விவசாயம் செய்வதில்லை. சமவெளிப்பகுதியில் மட்டுமே விவசாயம் நடப்பதால், இங்கு நிலச்சரிவிற்கு வாய்ப்பு இல்லை. எனவே, குறிப்பிட்ட அரசாணையில் இருந்து ஈரோடு மாவட்ட மலைப்பகுதி விளை நிலங்களுக்கு விலக்கு அளிக்க திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மலைப்பகுதியில் விவசாயம் செய்யும் 20 ஆயிரம் குடும்பத்தினர் பட்டா இல்லாததால், அரசின் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகை என எதையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொருத்தமில்லாத வருவாய்த்துறை அரசாணை நீக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

அதே நேரத்தில், ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் உள்ள 15 வனத்துறை பழங்குடியினர் குடியிருப்புப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, வன உரிமைச் சட்டம் 2006-ன் படி பட்டா வழங்கப் பட்டுள்ளது. நிலச்சரிவைக் காரணம் காட்டி ஒருபகுதியில் பட்டா மறுக்கப்படும் நிலை யில், வனத்துறையினர் மட்டும் பட்டா வழங்குவதால் விவசாயி களிடையே அரசு பாரபட்சம் காட்டு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் குற்றச்சாட்டு

இவ்விரு பிரச்சினைகள் தவிர, சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், வனப்பகுதியில் வனப்பொருட்களை சேகரிப்பது, கால்நடை மேய்ப்பது போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச் சாட்டு தொடர்கிறது. வன உரிமைச் சட்டப்படி மலைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு உரிய உரிமையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மலைப்பகுதி மக்களிடையே எதிரொலிக்கிறது.

தாளவாடி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், திம்பம் சாலையில் இரவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனப் போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளும் தேர்தலின் போது எதிரொலிக்கும் என்கின்றனர் மலைக் கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x