Published : 16 Mar 2019 11:08 AM
Last Updated : 16 Mar 2019 11:08 AM

அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கா காங். வேட்பாளரை வெற்றி பெறவைக்க களம் இறங்கினார் செந்தில்பாலாஜி

தனது அரசியல் எதிரியை வீழ்த்த மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறவைக்க முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி களம் இறங்கிவிட்டார்.

அதிமுகவில் இருந்தபோது தனது அமைச்சர் பதவி பறிபோக மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரைதான் காரணம் என்று, ஆளுங்கட்சிக்கு எதிராக க.பரமத்தியில் அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு மற்றும் டிடிவி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தனது அரசியல் எதிரியான மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையை வீழ்த்துவதற்காக திமுகவில் இணைந்தார். கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கண்டிப்பாக மு.தம்பிதுரை தான் போட்டியிடுவார். அவரை வீழ்த்தி திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்து, தானும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைய திட்டமிட்டார். மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பையும் கைப்பற்றினார்.

மக்களவைத் தேர்தலுடன் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதை, கட்சித் தலைமை தனக்கு வைத்து சோதனையாக எடுத்துக்கொண்ட செந்தில்பாலாஜி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைக்க நேற்றே களப்பணியைத் தொடங்கிவிட்டார்.

கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அலுவலகம் நேற்று யாருமின்றி பூட்டிக்கிடந்தது. இந்நிலையில், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வி.செந்தில் பாலாஜி, ‘‘அதிமுக வேட்பாளரான தம்பிதுரையை வீழ்த்த வேண்டும். கூட்டணிக் கட்சியென எண்ணாமல் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுகவை விட 50,000 வாக்குகள் அதிகம் பெற்று, அடுத்து ஒரு மாதத்தில் வரும் தேர்தலுக்கான வெற்றியை உறுதி செய்ய வேண்டும். களப்பணி மூலம் 10 சதவீத வாக்குகளை மாற்ற முடியும். எனவே, களப்பணியை தொடங்குங்கள்’’ என்று பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

காங். வேட்பாளர் ஜோதிமணி?கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி(43) வேட்பாளராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நேரடி தொடர்பில் உள்ள ஜோதிமணி, கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து, 2014-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது களமிறங்கி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முன்பே 2016-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாரானார். ஆனால், திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமையவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காங்கிரஸில் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மற்றும் ஜோதிமணி என இரு கோஷ்டிகள் உள்ளதால், தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளர் யாரென அறிவிக்கப்படாத நிலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் நேற்று பூட்டியே கிடந்தது. இருப்பினும் ஜோதி மணியே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x