Published : 25 Mar 2019 15:50 pm

Updated : 25 Mar 2019 15:50 pm

 

Published : 25 Mar 2019 03:50 PM
Last Updated : 25 Mar 2019 03:50 PM

தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுவை வாங்குவதிலும் வர்க்க பேதம் பார்ப்பது சரியா?- கி.வீரமணி கேள்வி

தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுவை சிலரிடம் எழுந்து நின்று வாங்குவதும், வேறு சிலரிடம் உட்கார்ந்தபடியே வாங்குவதும் சரியா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தேர்தல் ஆணையம் இம்முறை புதிதாக பிரியாணி பொட்டலம், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவற்றுக்குக் கட்டணம் விதித்து மிகவும் கண்டிப்புடன், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு அனுமதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் நாடாளுமன்றத்திற்கு, சட்டப்பேரவைக்கு 28 லட்சம் ரூபாய் என்ற கணக்குக்கு அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறக்கூடிய ஒரு கத்தியை வேட்பாளர்களின் தலைக்குமேல் தொங்க விட்டிருக்கிறது.


பிரியாணி பொட்டலம் லஞ்சமில்லையா?

பிரியாணி பொட்டலம் லஞ்சம் அல்லாமல் வேறு என்ன? இதைத் தேர்தல் ஆணையம் சட்டப்படி தடுக்க முற்பட வேண்டுமே தவிர, இதற்குக் கட்டணம் போட்டு கணக்கிட்டால், அதனை சட்டப்படி ஏற்கிறது; அங்கீகரிக்கிறது என்பது தான் அர்த்தம். ஜனநாயகத்தைக் கேலி செய்து, பழிக்குப் பகிரங்கமாகவே ஆளாக்குவது எவ்வகையில் சரியானது - நியாயமானது? வெளிநாட்டவர்கள் இந்தச் செய்தியைப் படித்தால் பிரியாணி பொட்டலத்திற்காக தங்கள் வாக்குகளை விற்கும் வாக்காளர்கள் இந்திய வாக்காளர்கள் என்ற கெட்ட பெயர் வராதா?

கையில் மை வைப்பதும் அவமானமே!

அடையாள அட்டையுடன் - அதில் படமும் உள்ளபோது - கையில் மை வைப்பதே தேசிய அவமானம் அல்லவா? இது நிறுத்தப்படல் வேண்டும். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும்கூட - அவர் ஓட்டுப் போட்டால் கையில் மை வைத்தாக வேண்டும்; அதுபோல், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் உட்பட இச்சட்டத்திற்கு யாரும் விலக்கு அல்ல. இதன்மூலம் இந்திய வாக்காளர்கள் மறுபடியும் இரண்டாம் முறை வாக்களிக்கக் கூடியவர்கள் என்று மற்றவர்கள் எண்ணும் இழுக்கு தேசிய அவமானம் அல்லாமல் வேறு என்ன?

ஜோசியத்துக்குக் கொட்டியழும் பணம் தேர்தல் கணக்கில் வராதது ஏன்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் தேர்தல் ஆணையம், பெரும்பாலான வேட்பாளர்கள் ஜோசியர்களிடம், வாஸ்து நிபுணர்களிடம் ஜாதகம் பார்த்து - நல்ல நேரம் கணித்து, வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்களே, அந்த ஜோசியர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணங்களை செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டாமா? பிரியாணி பொட்டலமாவது 200 ரூபாய்; ஜோதிடமோ ஆயிரத்திற்கு, 500 ரூபாய்க்குக் குறையாதது.

யாகங்களுக்கான செலவும் முக்கியம் தானே!

யாகங்கள், அதுவும் 'சத்ரு சங்கார யாகங்களுக்கு' பல லட்சம் ரூபாய் அந்த வேட்பாளர்களால் செலவழிக்கப்படுகிறது. புரோகித பிராமணர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்களே - அது ஏன் கணக்கில் சேர்க்கப்படக் கூடாது? அதற்கு ஆகும் நெய் உள்பட பல பொருள்களின் விலை கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா?

நல்ல நேரம், முகூர்த்த நாள் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்கள்; இதற்கு விதி விலக்கு ஏதோ ஆயிரத்தில் ஒன்றாக இருந்தாலே அதிசயம். வடநாட்டில் சாமியார்களுக்கும், ஜோசியர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி. முன் அனுமதி வாங்கித் தருபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறதாம்.

தேர்தல் அறிவிப்பு ராகு காலத்தில் தானே வெளியிடப்பட்டது!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையரால் 2019 மார்ச் 10 ஞாயிறு மாலை 5 மணிக்கு ராகு காலத்தில்தான் அறிவிக்கப்பட்டது. ராகு காலத்தில் அறிவிக்கப்பட்டதால், தேர்தலில் நிற்கமாட்டோம் என யாரும் கூறவில்லை.

ஜோதிடம் பார்த்த அனைவரும் வெற்றி பெற முடியுமா?

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும்தானே வெற்றி பெற முடியும்? பின் என்ன நல்ல நேரம் - வெங்காயம்? அதே சாதி என்ற இந்த முட்டாள்தனத்திற்கு மெருகு ஏற்றப்பட்ட தங்கப் பூண்! இவர்கள் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுக்கப் போகிறார்களே -அதில் 51 ஏ-எச் பிரிவில், அடிப்படைக் கடமைகள் என்ற தலைப்பு என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டல், சீர்திருத்தம் - இவற்றை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது.

வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வரும்பொழுது, தேர்தல் அதிகாரிகள் நடந்துகொள்ளும் போக்கு கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, எழுந்து நின்று வரவேற்பது, வேட்பு மனு வாங்குவது; மற்றவர்கள் வரும்போது உட்கார்ந்தபடியே வாங்குவது - இதில் என்ன 'வருண பேதம்' - வர்க்க பேதம்? உயர்ந்தவர் - மட்டமானவர் என்ற கணிப்பு? அலுவலக நடைமுறைப் பண்புக்கு இது உகந்ததுதானா? சட்டத்தின்முன் அனைவரும் சமமில்லையா? இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்புவது நல்லது" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!  திராவிடர் கழகம்கி.வீரமணிதேர்தல் ஆணையம்மக்களவைத் தேர்தல் 2019Dravidar kazhagamK veeramaniElection commissionLok sabha elections 2019

  Sign up to receive our newsletter in your inbox every day!

  You May Like

  More From This Category

  More From this Author

  x