Published : 12 Mar 2019 12:24 PM
Last Updated : 12 Mar 2019 12:24 PM

ஆளுங்கட்சிக்கு சவாலாக இருக்கும் நிலக்கோட்டை: மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யார்?

நிலக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்படும் நிலை உள்ளது. இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அதிமுக, திமுக கட்சிகள் வேகமாக தொகுதியில் களம் இறங்கின. அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திமுகவினர் மாதிரி ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி மக்களை சந்திக்கத் தொடங்கினர். இந்நிலையில் இடைத்தேர்தல் தாமதமாகும் அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன் இரு கட்சியினரும் தொகுதியில் அமைதி காத்தனர். தற்போது மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுவது உறுதியானவுடன் இரு கட்சிகளும் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளன.

அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ தேன்மொழி, அவரது கணவரும் நிலக்கோட்டை நகரச் செயலாளருமான சேகர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோரின் ஆதரவு உள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணி செய்வர் என்ற நம்பிக்கை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைப்பது உறுதியாகியுள்ளது. திமுக சார்பில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அன்பழகன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மேலும் திமுக மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேர் நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளனர். இவர்களிடம் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

அமமுக சார்பில் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்துரை மீண்டும் களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேசமயம் புதுமுகங்கள் சிலரும் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். தங்கத்துரை போட்டியிட விரும்பாதபட்சத்தில் புதிய நபர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருந்தாலும், கடும் போட்டி அதிமுக, திமுக, அமமுக இடையேதான். நிலக்கோட்டை இடைத்தேர்தல் ஆளுங்கட்சியினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x