Published : 19 Mar 2019 10:03 AM
Last Updated : 19 Mar 2019 10:03 AM

ஒரு ‘சீட்டு’க்காக மூன்றாக பிரிக்கப்பட்ட மதுரை அதிமுக:சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரியத்தை சாதித்த அமைச்சர் உதயகுமார்

முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரு ‘சீட்’ கொடுப்பதற்காக, கட்சித் தலைமை இரண்டு மாவட்டங்களாக செயல்பட்ட மதுரையை, தற்போது 3 மாவட்டங்களாக பிரித்து புதிய மாவட்டத் துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அதிமுக மேலிடம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை முடிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தில்தான் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் இரவு வரை தாமதமானதாகக் கூறப்படுகிறது.

மதுரை தொகுதியை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணன், முன்னாள் மேயரும், புறநகர் மாவட்டச் செயலா ளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மகன் ராஜ் சத்யன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில், வேட்பாளர் பட்டியலில் ஆரம்பத்தில் இருந்தே கோபாலகிருஷ்ணன் பெயர் இடம் பெற்றிரு ந்தது. ஆனால், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜ்சத்யன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது.

இது தொடர்பான பின்னணி தகவல்கள் குறித்து அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது:ராஜன் செல்லப்பா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்பதால், மகனுக்கு ‘சீட்’ பெறுவதை தன்னுடைய கவுரவப் பிரச்சினையாக கருதினார். மதுரை அதிமுக வில் ராஜன் செல்லப்பாவும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், முன்பு எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சியில் செல்வாக்கு பெற ஆரம்பித்ததால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ராஜன் செல்லப்பாவும், செல்லூர் கே.ராஜூவும் திடீரென்று ஒன்று சேர்ந்தனர். அதனால், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு மதுரையில் சீட் தர அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பரிந்துரை செய்தார். ராஜன் செல்லப்பாவும், செல்லூர் கே.ராஜூவும் முதல்வர் கே.பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரால் இருவரின் பரிந்துரையைத் தட்ட முடியவில்லை.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது மகனுக்கு தேனியில் ‘சீட்’ பெற்றதால், மதுரையில் ஆதரவாளர் கோபாலகிருஷ்ணனுக்காக நெருக்கடி கொடுக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், முதல்வருக்கு மிக நெருக்கமாக உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனது ஆதரவாளரான தமிழரசனுக்கு ‘சீட்’ கொடுத்தே ஆக வேண்டும் என கடுமையாகப் போராடினார். அதனால், முதல்வர் கே.பழனிசாமி அனைத்து தரப் பையும் சமரசப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அப்போது, அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தன்னுடைய ஆதரவாளருக்கு ‘சீட்’ தராவிட்டால், தனக்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை தர வேண்டும் என்று தன்னுடைய நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ பெற்றுத்தர முடியாமல் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் பச்சைக் கொடி காட்டினார். ராஜன் செல்லப்பா தனது மகனுக்கு ‘சீட்’ பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்ததால், இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டார். அதனால், ராஜன்செல்லப்பா வசமிருந்த புறநகர் மாவட்டப் பகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜன் செல்லப்பாவும், புதிதாக உரு வாக்கப்பட்ட புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஆர்.பி.உதயகுமாரும் நிய மிக்கப்பட்டுள்ளனர். ஒரு சீட்டுக்காக மதுரை அதிமுக மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இனிமேல், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செயல்படுவர்.

ஆர்.பி.உதயகுமார் அமைச்சராகவும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செய லாளராகவும் இருந்தாலும் அவரால் மதுரையில் சுதந்திரமாகக் கட்சியில் ஆதிக் கம் செலுத்த முடியவில்லை. அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், வி.வி.ராஜன் செல்லப்பாவும் கட்சி நிகழ்ச்சிகளில் உதய குமாரை ஓரம்கட்டி வந்தனர். இந்நிலையில், ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு சீட் வழங்கும் விவகாரத்தைப் பயன்படுத்தி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியைக் கைப்பற்றி காரியத்தைச் சாதித்துக் கொண்டார் ஆர்.பி.உதயகுமார். இதில் அதிக பலனடைந்தது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான் என்று கட்சியினர் தெரிவித்தனர். புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, ‘‘கட்சியினரை தலைமை திருப்திப்படுத்தி உள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஒரே நாளில் மீண்டும் மாற்றம்

மதுரை அதிமுகவை நேற்று முன்தினம், மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங்களாக பிரித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமித்து, அவரது மாவட்டத்தில் மதுரை மேற்கு, தெற்கு மற்றும் மத்திய சட்டப்பேரவைத் தொகுதிகளும், ராஜன் செல்லப்பாவை புறநகர் கிழக்கு மொவட்ட செயலாளராக நியமித்து, அவரது மாவட்டத்தில் மதுரை வடக்கு, கிழக்கு மற்றும் மேலூர் தொகுதிகளும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்து, அவரது மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜன் செல்லப்பா, தன்னுடைய வீடு அமைந்துள்ள சொந்த தொகுதியான திருப்பரங்குன்றம் தனது மாவட்டத்துக்குள் வேண்டும் என்றும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தன்னுடைய மாநகர மாவட்டத்தில் இருந்த வடக்கு தொகுதியை தர வேண்டும் என்றும் கட்சித் தலைமையிடம் போர்க்கொடி உயர்த்தினர்.

அதனால், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த கட்சித் தலைமை, மதுரை வடக்கு தொகுதியை மீண்டும் செல்லூர் கே.ராஜூவின் மாநகர மாவட்டத்துடன் சேர்த்தும், திருப்பரங்குன்றம் தொகுதியை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜன் செல்லப்பாவுக்கு ஒதுக்கியும் உத்தரவிட்டது. இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாவட்டம் பிரித்ததில் மீண்டும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x