Last Updated : 19 Mar, 2019 06:05 PM

Published : 19 Mar 2019 06:05 PM
Last Updated : 19 Mar 2019 06:05 PM

கிருஷ்ணசாமியின் சாதி அரசியல் இனியும் எடுபடாது; தென்காசியில் வெற்றி உறுதி: திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் நம்பிக்கை

கிருஷ்ணசாமியின் சாதி அரசியல் இனியும் எடுபடாது. தென்காசியில் எங்கள் வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகள் உள்ளன. முஸ்லீம் லீக் கட்சியும் தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்திருக்கிறது.

தொகுதி ஒதுக்கீட்டுக்கு முன்னதாக தென்காசியில் காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றிருப்பதால் கூட்டணிக் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திமுக தென்காசி (தனி) தொகுதியை எடுத்துக் கொண்டதோடு ராஜபாளையம் முன்னாள் எம்.எல்.ஏ., தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமாருக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளது.

முதன்முறையாக தேர்தல் களம் காணும் தனுஷ் எம்.குமாரை 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பாக தொடர்பு கொண்டபோது தொகுதியின் பிரச்சினைகள் குறித்தும் தனது இலக்கு குறித்தும் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் விரிவாக உற்சாகமாகப் பேசினார். தொகுதிக்காக மாடல் திட்டத்தை அவர் முன்வைக்கிறார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தென்காசியில் போட்டியிடுகிறது. எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 1991-ல் சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அவரது தோல்விக்குப் பின்னர் திமுக கூட்டணிக் கட்சிக்கே இந்தத் தொகுதியை ஒதுக்கியது. இந்த முறை மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதில் மகிழ்ச்சி. என்னைப் போலவே ஒவ்வொரு அடிமட்டத் தொண்டரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். திங்கள்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்யவே காத்திருக்கிறார்கள். அதன் பிறகு வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை செய்வார்கள்.

இந்தத் தொகுதியில் 9 முறை வெற்றியை நிலைநாட்டிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்குமல்லவா?

நிச்சயமாக இருக்காது. தோழமைக் கட்சியென்றால் அதுதானே அர்த்தம். மேலும், எங்கள் தலைவர்தான் முதன்முதலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்தி குரல் கொடுத்தார். அந்த உற்சாகம் காங்கிரஸ் தொண்டர்களிடம் இருக்கிறது. அவர்கள் திமுகவுக்கு வேலை பார்க்கும்போது அது மத்தியில் காங்கிரஸுக்கான பலம் சேர்க்கும் வேலை என்றே கருதுவார்கள். இந்த அரசியல் கணக்கு புரியாதவர்கள் அல்ல காங்கிரஸ் நண்பர்கள்.

அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் கிருஷ்ணசாமி களம் காண்கிறார். அவர் ஏற்கெனவே அறியப்பட்டவர். அவரை எப்படி எதிர்கொள்வீர்கள்?

மக்களால் அறியப்பட்டவராக இருந்தால் மட்டும் போதாது. மக்களுக்காக செயல்படுபவராக இருக்க வேண்டும். தேன்காசிதான் எனது பூர்வீகம். நான் இந்த ஊரில் 10 வருடங்களாக தொழில் செய்கிறேன். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளிலும் கேஸ் ஏஜன்ஸி இருக்கின்றன.

தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னவென்பது எனக்குத் தெரியும்.

கிருஷ்ணசாமி தேர்தல் காலத்தில் மட்டும்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி பக்கம் வருவார். மற்றபடி அவரைப் பார்க்க வேண்டுமென்றால் கோவைக்குத்தான் செல்ல வேண்டும்.  குற்றாலச் சாரல் போலத்தான் சீசனுக்கு கிருஷ்ணசாமி வந்து செல்வார். தொகுதியைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் 1% கூட அவருக்குத் தெரியாது. வாக்களிக்கும் மக்கள் உள்ளூர்வாசியைத்தானே எளிதில் நாட முடியும் என நம்புவார்கள்.

கிருஷ்ணசாமியின் கோரிக்கையின் பேரில் முதல்வர் அமைத்துள்ள குழு பற்றி..

ஆமாம், ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார். ஆனால் இதை அந்தக் காலத்திலேயே எங்கள் டாக்டர் கலைஞர் செய்துவிட்டார். ஆனால், அதிமுக ஆட்சி வந்த பின்னர் அந்தக் கோப்புகள் தூக்கி வீசப்பட்டன. அதைத்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி தூசி தட்டியிருக்கிறார். பரமக்குடி, ஒட்டப்பிடாரம் பொதுக்கூட்டங்களில் தலைவர் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், கிருஷ்ணசாமி இதை மட்டுமே சொல்லி சாதி அரசியல் செய்ய நினைக்கிறார். தென்காசி மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். அவர்களை இனியும் ஏமாற்ற முடியாது. கிருஷ்ணசாமியின் சாதி அரசியல் இனியும் வெற்றி பெறாது. தேர்தல் வரும்போதெல்லாம் கட்சிகளிடம் பேரம் பேசி கல்லா கட்டுகிறார் கிருஷ்ணசாமி.

அதுமட்டுமல்லாமல், அவரது அரசியல் நிலைப்பாடு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருமுறை திமுக, மறுமுறை அதிமுக என கட்சி மாறிக் கொண்டே இருக்கிறார்

பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே தென்காசி திமுகவுக்கு என்று சொன்னீர்கள். அது என்ன கணக்கு?

மிகவும் எளிமையான கணக்கு. மோடி வேண்டாம் என்ற கணக்கு. தென்காசியில் மதச்சார்பின்மையை விரும்பும் மக்களின் ஒருமித்த எண்ணம் மோடி வேண்டாம் என்பதே. அவர்கள் மத்தியில் ராகுலையும், மாநிலத்தில் தலைவர் ஸ்டாலினையும் விரும்புகின்றனர். தனித் தொகுதிக்கான சாதி வாக்குகளைக் கடந்து சிறுபான்மையினர் மற்றும் பிற சாதியினர் வாக்குகளைப் பெறுபவருக்கே வெற்றி கிட்டும். அந்த வகையில் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் எங்களுக்குத்தான். அதுதவிர, 2004, 2009 என இரண்டு முறை இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. அவர்களும் எங்களுக்காக களப் பணி ஆற்றுவார்கள். விசிகவின் ஆதரவு இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செல்வாக்கு என எல்லாம் எங்களுக்கே இருக்கிறது. அதனால், தென்காசி திமுகவுக்கே.

சரி, உங்கள் தொகுதியின் பிரதான பிரச்சினை என நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்?

இங்குள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய நான் இவற்றையெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதிகளிடம் மட்டும் மக்களை நான் சந்திக்க விரும்பவில்லை. அவர்களோடு சேர்ந்து குரல் கொடுத்து தீர்வு காண விரும்புகிறேன். தென்காசியில் தொழில் செய்பவன் என்ற முறையில் சொல்கிறேன் இங்குள்ள மக்கள் அரசுப் பணிகளை முடிக்க திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டியதாக உள்ளது. குறைந்தது 1 மணி நேரம் பயணப்பட வேண்டியிருக்கிறது. தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கும்.

தொகுதிக்கான உங்களின் பார்வை என்ன?

தென்காசியில் விவசாயமே பிரதானம். நான் படித்ததும் விவசாயம் சார்ந்த படிப்புதான். நான் இப்போது கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறேன். இருந்தாலும், விவசாயம் தான் எனது பிரதான தொழில். அதனால், விவசாய சேவை மையம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. விவசாய நிலத்தை உழுதல் தொடங்கி விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது வரை தொகுதி விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்ல விவசாய மையம் தொடங்க திட்டமிட்டிருந்தேன். இப்போது எனக்கு கட்சி சீட் கொடுத்திருக்கிறது. மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றால் அரசாங்க உதவியுடன் இதனை நிறைவேற்றுவேன்.

அதேபோல் தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு உதவியுடன் ப்ளேஸ்மென்ட் செல் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலே தென்காசி மக்கள் குளிர்ந்துவிடுவார்கள். தலைவர் வழிகாட்டுதலின்படி இதனை இந்தத் தொகுதி மக்களுக்காக நிறைவேற்றி தென்காசியை திமுகவின் கோட்டையாக்குவதே பார்வை.

இவ்வாறு தனுஷ் எம்.குமார் கூறினார்.

 

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x