Last Updated : 18 Mar, 2019 06:30 PM

 

Published : 18 Mar 2019 06:30 PM
Last Updated : 18 Mar 2019 06:30 PM

ஸ்டெர்லைட் வலியால் திமுக, அதிமுகவை தூத்துக்குடி மக்கள் புறக்கணிப்பார்கள்; என்னை ஆதரிப்பார்கள்: வ.கவுதமன் சிறப்புப் பேட்டி

"வலி சுமந்து நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அந்த வலி திமுகவும் அதிமுகவும் பாஜகவும் தந்தது. அதனால் அவர்களால் இந்தக் கட்சிகள் புறக்கணிக்கப்படும். அவர்களுக்குத் தேவை ஒரு மாற்று. அவர்களிடம் இருப்பதைக் காக்கவும் இழந்ததை மீட்கவும் அந்த மாற்றாக இருந்து இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன்" எனக் கூறுகிறார் தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவர் வ.கவுதமன்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவிலிருந்து தமிழிசை சவுந்தரராஜன் நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினருடன் வ.கவுதமன் ஞாயிறு அன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் குரல் கொடுத்தவர் இயக்குநர் வ.கவுதமன். சில மாதங்களுக்கு முன்னதாக அரசியல் கட்சியை அறிவித்தார். தமிழ்ப் பேரரசு என்று கட்சிக்கு பெயர் சூட்டினார். தற்போது அவர் தூத்துக்குடியில் போட்டியிடவிரும்புவதாகக் கூறியிருக்கும் நிலையில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் அவரை அணுகினோம்.

மக்களவைத் தேர்தலில் நீங்கள் தூத்துக்குடியில் போட்டியிடுவது உறுதிதானா?

ஆம். தூத்துக்குடியில் நான் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால், தேர்தல் அரசியலுக்கு பொருளாதாரம் அவசியம். இந்தத் தேர்தலுக்கான அடிப்படை பொருளாதார உதவி நியாயமான முறையில் கிடைக்கும்போது தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிடும்.

கனிமொழியை வேட்பாளாராக அறிவித்துவிட்டது திமுக. அதிமுக கூட்டணியில் தமிழிசைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இவர்களுடன் நீங்கள் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்குமா?

இருக்கட்டுமே. தூத்துக்குடி மக்கள் வலி சுமந்து நிற்கிறார்கள். இந்த வலி ஸ்டெர்லைட்டைத் தொடங்கி வைத்த திமுக, வளர்த்தெடுத்த அதிமுக, அடித்தளம் போட்ட பாஜக என எல்லா கட்சிகளாலும் விளைந்தது. வலியில் இருக்கும் மக்கள் திமுக, அதிமுக, பாஜகவைப் புறக்கணிப்பார்கள். தூத்துக்குடியில் இந்தக் கட்சிகளால் ஏற்பட்ட ரத்தக்கறை இன்னும் அழியவில்லை.

மக்கள் அழைப்பு விடுத்ததின் பேரிலேயே நான் தேர்தலில் போட்டியிடுவதை பரிசீலித்தேன். நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என நினைத்தால் நீங்கள் போட்டியிட வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கை. அதனை ஏற்றே நான் களம் காணத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இது ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் குரல் மட்டுமா? இல்லை ஒட்டுமொத்த தூத்துக்குடியின் குரல் என நினைக்கிறீர்களா?

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு என்று தனி சமூகமா இருக்கிறது? தூத்துக்குடி மக்கள்தானே அவர்கள். வணிகர்கள், வியாபாரிகள் மக்கள், விவசாயிகள் என பலதரப்பினரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், நான் ஒன்றும் திடீரென்று மக்களிடம் நிற்கவில்லை. மக்களோடு மக்களாக பல களங்களில் நின்றிருக்கிறேன். ஸ்டெர்லைட்டை எதிர்த்து ஐ.நா.வரை குரல் கொடுத்ததால் திமுக, அதிமுகவைவிட அவர்கள் என்னை நம்புகின்றனர். அவர்களுக்கு நான் நேர்மையான முகமாகத் தெரிகிறேன்.

தூத்துக்குடி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் நேர்மையான முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. மாற்று அரசியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் மட்டும்தான் போட்டியா?

நிச்சயமாக இந்த முறை தூத்துக்குடியில் மட்டும்தான். அதற்கே பொருளாதார உதவியை நாடியிருக்கிறேன்.

சரி, தேர்தல் களத்தில் எதை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பீர்கள்?

இந்த மண்ணின் நிலமும், இனமும், உடைமையும், உரிமையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். இருப்பதைக் காக்கவும் இழந்ததை மீட்கவும் முழங்குவேன். தூத்துக்குடி மக்களின் ஆதரவு நிறையவே இருக்கிறது என்பதை அவர்களுடனான சந்திப்பு புரியவைத்துவிட்டது.

முதன்முறை களம் காண உள்ளீர்கள். வெளியில் இருந்து ஆதரவு ஏதும் கோரியிருக்கிறீர்களா?

டிடிவி தினகரன் தரப்பினரிடம் பேசியிருக்கிறேன். அவரும் இதுதொடர்பாக என்னிடம் சில முறை பேசியிருக்கிறார். சீமான் தரப்பினரிடமும் பேசியிருக்கிறேன். இவர்கள் எல்லோரும் பாஜகவை, அதிமுகவை, திமுகவை எதிர்க்கிறார்கள். அந்தப் புள்ளியில் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் ஆதரவு கிடைத்தால் நலமே.

மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனிடம் பேசவில்லையா?

பேசவில்லை.. பேசவும் மாட்டோம். ஏனெனில், கமல் இயங்கவில்லை, இயக்கப்படுகிறார். தேர்தலில் அவர் பெறும் வாக்குகளை அறுவடை செய்பவர் யார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது உங்களுக்கு உண்மை புரியும். அவரை இயக்குபவர்கள் எங்களை வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இந்தத் தேர்தலிலும் பணம் பேசுமா?

இந்தத் தேர்தலில்தான் பணம் மிகக் கடுமையாக பேசப்போகிறது. காரணம் களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நேர்மையற்றவர்கள். அவர்கள் மக்கள் கோபத்தைப் போக்கும் ஒரே ஆயுதமாக பணத்தை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், மக்கள் கோபத்துக்கு பணம் மருந்தாக இருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அளிக்கும் வாக்குகள் உணர்த்தும்.

இவ்வாறு வ.கவுதமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x