Last Updated : 20 Mar, 2019 03:21 PM

 

Published : 20 Mar 2019 03:21 PM
Last Updated : 20 Mar 2019 03:21 PM

மகன் மீது நம்பிக்கை இல்லாததால் தான் கருணாநிதி ஸ்டாலினை தலைவராக்கவில்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

மகன் மீது நம்பிக்கை இல்லாததால் தான் கருணாநிதி வாய் பேசாத நிலையிலும் ஸ்டாலினை தலைவராக்கவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) சேலத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.எஸ்.ஆர் சரவணனை அறிமுகம் செய்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமமுக கட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார்.

"அமமுக கட்சி பதிவு செய்யாத ஒரு கட்சி. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தை பிறக்காமல் பெயர் வைத்துக் கொண்டு அலைவது போல பேசிவருகிறார்கள். எனவே அவர்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை" என்றார்.

மேலும் முதல்வர் பேசியதாவது:

"பிரதமர் மோடி மீண்டும் பிரச்சாரத்துக்கு தமிழகம் வர உள்ளார். 4 மாவட்டத் தலைநகரங்களில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.

மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டமாக சென்னையில் செயல்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதன்பின்னர், சேலம் நெய்க்கார பட்டியில் உள்ள பொன்னாகவுண்டர் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் பாஜக, பாமக கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:

"பாஜக என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரபலமான கட்சியுடன் கூட்டணி. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியும்.

பாமக, தேமுதிக என பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். நேரத்திற்கு நேரம் நிறம் மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக. வாக்கு வங்கி அதிகமாக உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு பெருமிதம் அடைந்துள்ளோம். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் மிகப் பெரிய கட்சிகள்.

எதிரணியில் உள்ள வைகோ, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

எதிரணியில் உள்ள ஸ்டாலின் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை செயல் தலைவராகவே இருந்தார். கருணாநிதி வாய் பேசாத நிலையிலும் ஸ்டாலினை தலைவராக்கவில்லை. தந்தைக்கே மகன் மீது நம்பிக்கை இல்லாதபோது, ஸ்டாலினை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

பச்சோந்திகள் கூட நேரம் பார்த்துதான் நிறம் மாறும். ஆனால், திமுக நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுகிறது. 12 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்காக என்ன திட்டங்களைக் கொண்டு வந்தது?

தமிழகம் வளம் பெற தமிழக மக்கள் நலம் பெற மத்தியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அதிமுக வலிமையான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.

சில சதிகாரர்களால்  18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த 18 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று சதிகாரர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்.

கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக கூட்டணிக் கட்சிகள் பாடுபடும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக - பாமக கூட்டணியில் பாமக சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு கவனம் செலுத்தும். தமிழகம் முழுவதும் சாலைகளை மேம்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த சாலைகளை அமைத்துத் தருவோம்.

ராணுவத்திற்கான தளவாட உபரி பாகங்களைத் தயாரிக்கும் ஆலை சேலத்தில் அமைய உள்ளது. அதற்காகப் பாடுபடுவோம். அதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு அமைய வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கை என்பது நாடு செழிக்க பாரதம் செழிக்க முத்து முத்தான அறிக்கை".

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x