Published : 05 Mar 2019 11:11 AM
Last Updated : 05 Mar 2019 11:11 AM

உளவுத்துறை அறிக்கை சாதகம்: மதுரை அதிமுக எம்.பிக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?

அதிமுக தரப்பில் ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, அவர் களுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடக்கிறது. மற்றொரு புறம், அதிமுக மேலிடம், தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளரை அடையாளம் காணும் பணியை சத்தமில்லாமல் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ‘சிட்டிங்’ எம்பிகள் வெற்றி வாய்ப்பு பற்றி ஆய்வு செய்து உளவுத்துறையினர் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், மதுரை தொகுதி ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணனை பற்றி உளவுத் துறை சாதகமான பதில் அனுப்பி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: ஓ.பன்னீர் செல்வம் அணியில் ‘சீட்’ கிடைக்க வாய்ப்புள்ள 3 முக்கிய ‘சிட்டிங்’ எம்பிகளில் கோபாலகிருஷ்ணனும் ஒருவர். அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதன் முதலில் ஆதரவு அளித்தவர் கோபாலகிருஷ்ணன் எம்.பி. அதனால், இவருக்கு மதுரை தொகுதியில் மீண்டும் சீட் பெற்றுத்தர ஓ.பன்னீர் செல்வம் முயற்சி செய்கிறார். இவருக்கு போட்டியாக புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தனது மகன் ராஜ் சத்தியனுக்கு ‘சீட்’ கேட்கிறார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா மகனுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தன்னுடைய ஆதரவாளரான கிரம்மர் சுரேஷுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

இவர்கள் மூவரை தவிர, மற்ற நிர்வாகிகள் யாரும் சீட் கேட்டு தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தெரிய வில்லை. அதிக பணம் செலவு செய்ய வேண்டும் என்பதாலும், ஜெய லலிதா இல்லாத அதிமுக சார்பில் நின்று வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகத்திலும் பலர் சீட் கேட்க தீவிரம் காட்டவில்லை. இந்நிலையில், சிட்டிங் எம்பிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து உளவுத்துறை அதிமுக மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மதுரை தொகுதியில் கோபாலகிருஷ்ணனுக்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாகத் தெரி வித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற திட்டங்கள் மதுரைக்கு வருவதற்கு முயற்சி எடுத்ததால் அவருக்கு எதிராக பெரிய அளவில் அதிருப்தி இல்லை. அதே சமயம், கட்சிக்காரர்களிடம் நெருக்கமாக இல்லை என்ற புகார் உள்ளது.

கட்சியில் பெரிய பதவி எதுவும் அவருக்கு இல்லாததால், கட்சி செயல் பாட்டிற்குள் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருடன் அவருக்கு பகையும் இல்லை. நெருக்கமான நட்பும் இல்லை. எனவே, கட்சித் தலைமை கோபாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தால் அவரை வெற்றிபெற வைக்க அவர்கள் முழுமனதுடன் களம் இறங்குவார்கள். அதே நேரம், மதுரை தொகுதியை பாஜகவும், தேமுதிகவும் கேட்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுரையை தக்க வைத்துக் கொள்ளவே அதிமுக விரும்புகிறது. அவ்வாறு அதிமுக போட்டியிடுவது என முடிவானால், கோபாலகிருஷ்ணன் களமிறக்கப்படு வதற்கான வாய்ப்பு தற்போது பிரகா சமாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x