Published : 28 Feb 2019 04:52 PM
Last Updated : 28 Feb 2019 04:52 PM

தென் மாவட்டங்களில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு: வேட்பாளர்கள் தயார், திமுகவின் அறிவிப்புக்காக காத்திருப்பு

தென் மாவட்டங்களில் 5 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட் பாளர்கள் தயாராக இருந்தபோதும் தொகுதிகள் அறிவிப்புக்காக அக்கட்சி காத்திருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்தத் தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும் தமிழகத்தில் பரவலாக போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தென் மாவட் டங்களில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். தென் மாவட்டங்களில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்குவது உறுதியான ஒன்றாகிவிட்டது.

இங்கு காங்கிரஸ் செயல்தலைவரான வசந்தகுமார் போட்டி யிட வாய்ப்புள்ளது. இவர் கடந்த தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தார். தற்பொழுது அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் எம்.பி.,க்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள் ளதால் கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப் படவுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு ஒரு தொகுதி தென் மாவட்டங்களில் ஒதுக்கப்படவுள்ளது. இதில் ராமநாதபுரமா? திருச்சியா? என்பது தொகுதி அறிவிப்புக்கு பின்னர் தெரியவரும். இந்த இரண்டு தொகுதிகளும் பரிசீலனையில் உள்ளன.

சிவகங்கை தொகுதியில் வழக்கமாகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் இவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் திண்டுக்கல் தொகுதியையும் தனது பரிசீலனையில் வைத்துள்ளார் என அக்கட்சியினர் கூறுகின்றனர். இரண்டில் ஒரு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும்.

தேனி தொகுதி முன்னாள் எம்.பி., ஆருண் ரசீத்துக்கு உறுதியாகிவிட்டது என்கின்றனர் திமுக, காங்கிரஸ் கட்சியினர்.

விருதுநகர் மக்களவைத் தொகு தியில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடாவிட்டால் காங்கிரசுக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. வைகோ இந்த முறை தொகுதி மாறி போட்டியிடுவார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி ஆகிய ஐந்து தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.

இதில் டெல்லியில் அதிக செல்வாக்குப் படைத்த காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஆருண் ரஷீத் ஆகி யோர் எளிதில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காங்கிரசை பொருத்தவரையில் வேட்பாளர்கள் தயா ராக உள்ளனர். திமுகவிலிருந்து தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்காகத்தான் காங் கிரஸ் தலைமை காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x