Published : 28 Feb 2019 04:41 PM
Last Updated : 28 Feb 2019 04:41 PM

குடும்ப உறுப்பினர்களுக்கு எம்பி ‘சீட்’ கேட்கும் தலைகள்: அதிமுகவிலும் தலை தூக்கியது ‘வாரிசு அரசியல்’

மக்களவைத் தேர்தலில் வாரிசுகளுக்கு ‘சீட்’ கேட்டு அதிமுகவின் அமைச்சர்கள், எம் எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதால் திமு கவைப் போல் அதிமுகவிலும் ‘வாரிசு’ அரசியல் தலைதூக்கியுள்ளது. திமுக கொள்கைப் பிடிப்போடு செயல்படும் கட்சி என்றாலும் அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட சிலருக்கே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். அதிலும் ‘வாரிசு’களுக்கு தாராளமாக ‘சீட்’ வழங்கப்படும்.

மேலும் அக்கட்சியில் மாவட்டச் செயலா ளர்களே எம்எல்ஏ, அமைச்சர், எம்பி என பதவிக்கு வருவார்கள். கட்சிப் பதவிகளும் மாவட்டச் செயலாளர் கை காட்டும் நபர்களுக்கே கிடைக்கும். ஆனால், அதிமுகவில் அதற்கு தலைகீழாக நடக்கும். கீழ்நிலைத் தொண்டராகவும், நிர்வாகி களாகவும் இருந்தவர்கள் மாவட்டச் செயலாளர், அமைச்சர், எம்பி ஆகிய உயர் பதவிகளுக்கு வந்துள்ளனர்.

இவர்களுக்கு எவ்விதப் பின்னணியும் இல்லாத நிலையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்கி கவுரவப்படுத்தினார். திமுகவில் இதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அங்கு தொண்டன் கடைசி வரை தொண்டனாகவே உயிரை விட வேண்டும்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உட்பட ஏராளமானோர் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் குடிசையில் வசித்த தொண்டர் கிருஷ்ணமூர்த்தி. அவரை ஜெயலலிதா தருமபுரி மாவட்டச் செயலாளர் ஆக்கியதோடு, பர்கூர் தொகுதி எம்எல்ஏவாகவும் ஆக்கினார். இப்படி குடிசையில் வசித்தவர்கள் கோபுரத்துக்கு வந்த பல உதாரணங்கள் அதிமுகவில் உண்டு.

அதனால், அதிமுகவில் உள்ளவர்கள் என்றாவது நமக்கும் பதவி தேடி வரும் என்று நினைத்துக்கொண்டு கட்சிப்பணியாற்றியதுண்டு. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின் திமுக-வை போல் அதிமுகவிலும் தற்போது ‘வாரிசு’ அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை, தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத்குமார் போட்டியிட ‘சீட்’ கேட்டுள்ளார். அதனால், அவர் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் களம் இறக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

அதுபோல், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விவி.ராஜன் செல்லப்பா, தனது மகன் ராஜ் சத்தியனை மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே, மாநில தகவல் தொழில் நுட்பப்பிரிவு இணைச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் அல்லது மதுரை மக்களவைத் தொகுதியில் ஏதேனும் ஒன்றில் தனது மகனை களம் இறக்க ராஜன் செல்லப்பா முயற்சி செய்து வருகிறார். மதுரை எம்பி தொகுதிக்கு ‘சீட்’ கிடைக்கா விட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியாவது வேண்டும் என கட்சித் தலைமையிடம் கேட்க முடிவு செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது மருமகன் கண்ணனுக்கு திண்டுக்கல் தொகுதிக்கு ‘சீட்’ கேட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தந்தைக்கு கரூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுள்ளார்.

இதேபோல், அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம், எம்.சி. சம்பத், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் எம்.பி. சீட் வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

இதுபோல், தமிழகம் முழுவதுமே அமைச் சர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘சீட்’ கேட்டு வாரிசுகளை களம் இறக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். திமுகவைப் போல் அதிமுக தலைவர்களும் வாரிசுகளை களம் இறக்குவதால் இனி முன்பு போல் உழைப்புக்கு உரிய மரியாதை, பதவி கிடைக்காது என அதிமுக தொண்டர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் என இரு பிரிவாக உள்ளனர். மதுரையைப் பொருத்தவரையில் ராஜன் செல்லப்பா ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர். அவர் தனது மகனுக்கு எம்பி சீட் கேட்கிறார். ‘சிட்டிங்’ எம்பி கோபாலகிருஷ்ணன் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்.

ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து வெளியேறியபோது அவருடன் முதலில் வந்த எம்பி என்பதால் கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்க அவர் முயற்சி செய்வார். இந்த ‘வாரிசு’ அரசியல் போட்டியில் ‘சீட்’ கிடைக்காதவர்கள் தேர்தல் நேரத்தில் விரக்தியில் டிடிவி.தினகரன் பக்கம் சாய வாய்ப்புள்ளது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x