Last Updated : 23 Feb, 2019 02:15 PM

 

Published : 23 Feb 2019 02:15 PM
Last Updated : 23 Feb 2019 02:15 PM

கண்ணியம் தவறாதீர்கள்; யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள்: தொண்டர்களுக்கு ராமதாஸ் அறிவுரை

யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள் என, தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுரை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் வானூரில் இன்று (சனிக்கிழமை) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

''7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிகின்றனர். பத்து தொகுதி கேட்டோம், கூட்டணி என்பதால் 7 மக்களவைத் தொகுதிக்கு ஒத்துக்கொண்டோம். ராஜ்யசபா எம்.பி. என்றால் இரு எம்.பி.களுக்குச் சமம்.

கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இது இயற்கையான கூட்டணி. தொண்டர்கள் கைகோத்து விட்டோம். அறிவிக்கும் முன்பாகவே இணைந்தனர். எந்த ஜோசியர் சொன்னார் என தெரியவில்லை.

கட்சி தொடங்கிய போதும், கூட்டணி வைத்தபோதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம் பேசுவதில்லை.

பத்து அம்சக் கோரிக்கைகள் கூட்டணியின்போது முன்வைத்தது பற்றி வேறு கட்சிகள் சொல்லமாட்டார்கள். ஆறு கோரிக்கைகளை கூடுதலாக்கி பத்தாக்கியவர் அன்புமணி.

7 தமிழர்கள் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். அற்புதம்மாள் தோட்டத்துக்கு வந்து அழுதார். முதல்வர் வரும்போது அழுத்தம் தரக் கூறினார். விடுதலையானவுடன் முதலில் செல்வது தைலாபுரம் தோட்டத்துக்குத்தான் என பேரறிவாளனே தெரிவித்துள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி 9-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டத்துக்கு பாமக தொண்டர்கள் முழு ஆதாரவு தர வேண்டும். அதற்கு முன்பே விடுதலை செய்ய வலியுறுத்தவும் முனைப்பாக உள்ளோம். கண்ணியமான வளர்ச்சிக்கான அரசியல் புரிய வேண்டும். பிரச்சாரத்தில் யாரையும் குறை கூறாதீர். புழுதி வாரி தூற்றினாலும், பதில் கூறக் கூடாது. பாசிட்டிவ் பிரச்சாரம் தேவை. கோபப்படாதீர்.

ராமதாஸ் சமூகப் போராளி, சிறப்பான கட்சி நடத்துகிறார். அக்கட்சிக்குதான் அதிகாரமுண்டு. அதுபற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என வைகோ கூறியது மன ஆறுதலைத் தந்தது. அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலில் கை கோக்கும் நிலை பலப்படுத்தும்.

கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரிகமாகப் பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக்கூடாது என்பது அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே".

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x