Last Updated : 20 Mar, 2019 09:41 AM

 

Published : 20 Mar 2019 09:41 AM
Last Updated : 20 Mar 2019 09:41 AM

அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்வு- வித்தியாசமான பெயர்களில் புதிய கட்சிகள் பதிவு

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் வித்தியாசமானப் பெயர்களில் புதிய கட்சிகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

வித்தியாசமானப் பெயர்களில் டுவென்டி 20 கட்சி, ஜாக்தே ரஹோ பார்ட்டி(விழித்திரு கட்சி), இந்திய காதலர்கள் கட்சி, அமைதியான வாழ்க்கை கட்சி, சூப்பர் தேசியக் கட்சி, வாக்காளர்கள் கட்சி, எம்எல்ஏ கட்சி, நம்பிக்கை கட்சி, அனைத்தையும் விட பெரிய கட்சி எனப் பட்டியல் தொடர்கிறது.

இவை பதிவானவை என்றாலும் இன்னும் இவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தம் சின்னங்களில் போட்டியிட முடியாது. இதற்காக அரசியல் கட்சிகளுக்காக ஆணையம் ஒதுக்கி உள்ள பொதுச் சின்னங்களில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பட்டியலில் தற்போது 86 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ‘20/20 கிரிக்கெட் போட்டியைக் கண்டு கவர்ந்த கேரளவாசிகளால் டுவென்டி 20 கட்சி துவக்கப்பட்டுள்ளது. இந்திய காதலர்கள் கட்சியின் சின்னம், தாஜ்மகாலின் உள்ளே இதயம் வரையப்பட்டு அதில் அம்புக்குறி எய்தபடி வரையப்பட்டுள்ளது. புதிய சந்ததியின் மக்கள் கட்சிகோயம்புத்தூரில் இருந்து பதிவாகி உள்ளது. தேர்தல் சமயங்களில் பதிவாகும் பெரும்பாலானக் கட்சிகள் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்தன.

தேர்தல் எனும் பெயரில் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் நிதி திரட்டும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதில் கடந்த 2006-ம் வருடம் சிக்கிய 255 கட்சிகள் மீது மத்திய நேரடிய வரிகள் வாரியத்தால் வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகிறது. புதிய கட்சிகள் சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் போட்டியிடுகையில் குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகளுடன் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரத்திற்கு பின் அவை எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதுவும் ரத்தும் செய்யப்பட்டுவிடும்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்தினம் வரை ஆணையத்தில் பதிவான மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆகும். இதில் தேசியக்கட்சிகளாக ஏழு, மாநிலக்கட்சிகளாக 59-ம் அங்கீகாரம் பெற்றுள்ளன. மக்களவை தேர்தலை குறி வைத்து பிப்ரவரி முதல் மார்ச் வரை என 37 நாட்களில் மட்டும் 149 கட்சிகள் புதிதாகப் பதிவு பெற்றுள்ளன.

தேர்தலில் போட்டியிடாமல் உள்ள புதிய கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என ஆணையம் அனுப்பிய யோசனை பல ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தால் சட்டத்திருத்தம் செய்ய நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x