Last Updated : 23 Mar, 2019 09:32 AM

 

Published : 23 Mar 2019 09:32 AM
Last Updated : 23 Mar 2019 09:32 AM

மத்திய அமைச்சர் கிருஷ்ணராஜ் உட்பட உத்தரபிரதேசத்தில் 6 எம்.பி.க்களை கழற்றிவிட்ட பாஜக

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட 6 எம்.பி.க்களுக்குப் பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக நேற்றுமுன்தினம் வெளியிட்டது. அதில் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், தலைநகர் லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் போட்டியிடுகிறார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்ததற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஸ்மிருதி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உ.பி.யில் 6 எம்.பி.க்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கிருஷ்ண ராஜ் (ஷாஜகான்பூர் - தனி), தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலைவர் ராம் சங்கர் கத்தேரியா (ஆக்ரா - தனி), அன்ஷுல் வர்மா (ஹர்தோய் - தனி), பாபுலால் சவுத்ரி (பதேபூர் சிக்ரி), அஞ்சு பாலா (மிஸ்ரிக் - தனி), சத்யபால் சிங் (சம்பல்) ஆகிய 6 எம்.பி.க்களுக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை.

இவர்களுக்குப் பதில், எஸ்.பி.சிங் பகேல் (ஆக்ரா - தனி), பரமேஷ்வர் லால் சைனி (சம்பல்), ராஜ்குமார் சாஹெர் (பதேபூர் சிக்ரி), ஜெய் பிரகாஷ் ராவத் (ஹர்தோய் - தனி), அசோக் ராவத் (மிஸ்ரிக் - தனி), அருண் சாகர் (ஷாஜகான்பூர் - தனி) ஆகிய 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேனகா காந்தி இல்லை

கான்பூர் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, பிலிபித் தொகுதி எம்.பி. மேனகா காந்தி, அவருடைய மகனும் சுல்தான்பூர் எம்.பி.யுமான வருண் காந்தி ஆகியோரின் பெயர்கள் பாஜக.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஹேமா மாலினிக்கு ‘சீட்’உ.பி.யின் பரேலி தொகுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், மதுரா தொகுதியில் நடிகை ஹேமா மாலினி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

சாக் ஷி மிரட்டல்

மேலும், உன்னாவ் தொகுதியில் தற்போதைய எம்.பி. சாக் ஷி மகராஜுக்கு மீண்டும் போட்டியிட பாஜக ‘சீட்’ வழங்கி உள்ளது. ‘‘இந்தத் தொகுதியில் எனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால், தேர்தல் முடிவுகள் பாஜக.வுக்கு நல்லதாக அமையாது’’ என்று சாக் ஷி மகராஜ் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்டத் தேர்தலில் பாக்பத், பிஜ்னூர், கவுதம் புத்தா நகர், காஸியாபாத், கைரானா, மீரட், முசாபர்நகர், சகாரன்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x