Published : 21 Mar 2019 07:25 AM
Last Updated : 21 Mar 2019 07:25 AM

ஆந்திராவில் தந்தையை எதிர்த்து மகள் போட்டி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தெலுங்கு தேச கட்சியிலும், இவரது மகள் காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மோதுகின்றனர். தந்தை, மகள் இருவரும் ஒரெ தொகுதியில் போட்டியிடுவதால் வெற்றி யார் பக்கம் என்பது எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

ஆந்திர மாநில தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் தனித்து போட்டியிடுகிறது. இதேபோன்று, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், பாஜவும் தனித்தே தேர்தலை சந்திக்கின்றன. ஜனசேனா கட்சி மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களத்தில் நிற்கிறது. சந்திரபாபு நாயுடு தனது 5 ஆண்டு சாதனைகளை விளக்கியும், மத்திய அரசு இழைத்த அநீதி குறித்து மக்களிடையே எடுத்துக்கூறியும் பிரச்சாரம் செய்து வருகிறார். ஜெகன்மோகன் ரெட்டி, ஆளும் கட்சியின் குறைகளை, தோல்விகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு மக்களவைத் தொகுதியில் தந்தையும் மகளும் எதிரெதிர் கட்சிகள் சார்பில் களம் இறங்கி உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் கிஷோர் சந்திரதேவ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இம்முறை இவர் அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், இத்தனை நாட்கள் தனது தந்தைக்கு அரசியலில் உறுதுணையாக இருந்த இவரது மகள் ஸ்ருதி தேவி, காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் தந்தையை எதிர்த்து போட்டியிடுகிறார். கிஷோர் சந்திர தேவின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட ஸ்ருதி தேவி, தற்போது அவரையே எதிர்த்து போட்டியிடுவதால், இத்தொகுதியின் முடிவு பெரிதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x