Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிக்கனியைப் பறிக்கப் போகும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
கடந்த 1951-ல் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. 15 முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும், த.மா.கா. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போது, ஆண் வாக்காளர்கள் 7,05,468 பேர், பெண்கள் 6,74,363 பேர், திருநங்கையர் 126 பேர் என மொத்தம் 13,79,957 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில்அதிமுக சார்பில் அசோக்குமார், திமுக சார்பில் சின்னபில்லப்பா, பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் டாக்டர்.செல்லக்குமார் உள்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக
அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சரத்குமார் மற்றும் சினிமா நடிகர்கள் பிரச்சாரம் செய்தனர். மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான கே.பி.முனுசாமி, மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில்வே திட்டம் தொடங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
பாமக
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமக சார்பில் போட்டியிடும் ஜி.கே.மணி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே வாக்குகள் சேகரிக்கத் தொடங்கி விட்டார். மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர், குளிர்பதனக் கிடங்குகள், மலர் ஏற்றுமதி மண்டலம், ரயில்வே திட்டம். மின் தடை, மது ஒழிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்துள்ளார்.
திமுக
திமுக வேட்பாளர் சின்னபில்லப்பாவிற்கு ஆதரவாக திமுக பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலர் அன்பழகன், தி.க. தலைவர் வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒகேனக்கல் திட்டம் உள்ளிட்ட கடந்த திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தும் பிரச்சாரம் செய்தார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர்.செல்லக்குமாருக்கு ஆதரவாக, ஜி.கே.வாசன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர் சிரஞ்சீவி மற்றும் கர்நாடக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். மத்திய அரசின் திட்டங்களை விளக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட இவர், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT