Last Updated : 14 Apr, 2014 12:00 AM

Published : 14 Apr 2014 12:00 AM
Last Updated : 14 Apr 2014 12:00 AM

நேர்மையின் வேட்பாளர்

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த மிகப் பெரிய நீர்ப்பாசன ஊழலை அம்பலப்படுத்திய அரசு அதிகாரி விஜய் பண்டாரே (60), நாசிக் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராகக் களத்தில் இறங்கியிருக்கிறார்.

பதவியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட பண்டாரே, மாநில அரசின் நீர்வளத் துறையில் 22 ஆண்டுகள் நேர்மையாகப் பணிபுரிந்தார். அந்த நேர்மைக்குப் பரிசாகவே அவரை மேல் அதிகாரிகள் 17 முறை பணியிட மாற்றம் செய்தனர்!

பவார்களின் சிம்மசொப்பனம்

மாநில அரசு மேற்கொள்ளும் பாசனத் திட்டங்களில் வேண்டுமென்றே திட்ட மதிப்பீட்டைக் கூட்டியும், திட்ட அமலுக்கு வாங்கும் சாதனங்களின் விலையை உயர்த்தியும் பணத்தை எடுத்துக் கையாடல் செய்கின்றனர் என்று மகாராஷ்டிர முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் 2012-ல் அவர் எழுதிய கடிதங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

வேறு வழியில்லாமல் இந்த ஊழல் புகார்களை விசாரித்தே தீரவேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டது. பாசனத் துறை அமைச்சராக இருந்த துணை முதலமைச்சர் அஜீத் பவார் இதனால் பதவி விலக நேர்ந்தது.

ஆம் ஆத்மியின் அழைப்பு

ஆம் ஆத்மி கட்சி, தங்களுடைய கட்சிக்கான வேட் பாளர்கள் தேர்வின்போது விஜய் பண்டாரேவுக்கு வாய்ப்பை அளித்திருக்கிறது. டெல்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே பண்டாரேவுக்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருந்தது. அந்தக் கட்சி என்ன வடிவம் எடுக்கிறது என்று காத்திருந்த பண்டாரே, டெல்லி தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியில் சேர்வதென்ற முடிவை எடுத்தார்.

கடுமையான போட்டி

நாசிக்கில் அவர் கடுமையான போட்டியை எதிர்கொண் டிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் இங்கே போட்டியிடும் மாநிலப் பொதுப்பணித் துறை அமைச்சர் சகன் புஜபலுக்கு இது சொந்தத் தோட்டம் மாதிரி. மேலும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் சார்பில் பிரதீப் பவாரும் சிவசேனை்் சார்பில் ஹேமந்த் கோட்சேவும் போட்்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நாசிக் மாநகராட்சி மன்ற உறுப்பினர் தினகர் பாட்டீல் பகுஜன் சமாஜ் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார்.

முத்திரைத்தாள் மோசடி

இத்தனை பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், வாக்காளர்கள் தன்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்று விஜய் பண்டாரே நம்புகிறார். போலி முத்திரைத்தாள் மோசடியின் பின்னணியில் இருந்தவர் சகன் புஜபல்தான் என்று தெலகி அளித்த வாக்குமூலத்தை நினைவுபடுத்திக் கொண்டு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கூறிவருகிறேன் என்கிறார் பண்டாரே.

சாதக பாதகங்கள்

வாக்காளர்களோ வேறுவிதமாக வும் சிந்திக்கின்றனர். பண்டாரே டெம்போவில் வாக்கு சேகரிக்கப் புறப்படுகிறார். ஆம் ஆத்மி தொண்டர்கள் 20 பைக்குகளில் அவரைப் பின்தொடர்கின்றனர். கட்சியின் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே விளையாட்டுச் சாமான்கள் விற்கும் கடை வைத்திருக்கும் சிங், அதை எந்த உணர்ச்சியும் காட்டாமல் வேடிக்கை பார்க்கிறார்.

‘‘பண்டாரேவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?’’ என்று அவரிடம் கேட்டோம். “டெல்லியில் ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லதைச் செய்வதை விட்டுவிட்டு, பாதியிலேயே கைவிட்டனர். உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தாக்குப்பிடிக்க முடியாதவர்கள், தேசப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பார்கள்?” என்றார்.

பண்டாரேவின் டெம்போ வேன் செல்வதை வீட்டு வாசலுக்கு வந்தும் ஜன்னல் வழியாகவும் பலர் வேடிக்கை பார்க்கின்றனர். “பண்டாரே எப்படி இருக்கிறார் என்று பார்க்க விரும்பினேன்” என்று கூறிய பள்ளிக்கூட ஆசிரியை மஞ்சிரி லீலே, “காங்கிரஸ், பா.ஜ.க-வுக்குப் போட்டு அலுத்துவிட்டோம், ஒருமுறை ஆம் ஆத்மிக்குத்தான் வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே” என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x