Published : 23 Apr 2014 03:56 PM
Last Updated : 23 Apr 2014 03:56 PM

தமிழகத்தில் பரவலாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: இடதுசாரிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், சில தேசியக் கட்சிகளும் பெருமளவில் பரவலாக பண விநியோகத்தை தமிழகம் எங்கும் செய்து வருகின்றன என்று இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நாளை (24-4-2014) நடைபெற உள்ள வாக்கு பதிவிற்கு முன்னதாக, ஜனநாயகநெறிமுறைகளுக்கு மாறகவும், மக்கள் தீர்ப்பை திசை திருப்பும் நோக்குடனும், தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், சில தேசியக் கட்சிகளும் பெருமளவில் பரவலாக பண விநியோகத்தை தமிழகம் எங்கும் செய்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் பண விநியோகத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த போதும், தடை உத்தரவுகள், பறக்கும் படை கண்காணிப்பு மூலம் தடுக்க முயற்சிப்பதாக கூறிய போதிலும் நடைமுறையில் பண விநியோகம் தங்குதடையற்ற முறையில் நடந்து வருகிறது.

இது ஜனநாயகத்தையும், நேர்மையான தேர்தலையும் சீர்குலைக்கும் நடவடிக்கை என்ற அவசரத்துடன் போர்க்கால அடிப்படையில் பண விநியோகத்தை தடுத்து நிறுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.

நாட்டு மக்களை பாதிக்கும் தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், வகுப்புவாதம் மற்றும் மெகா ஊழல்களை எதிர்த்தும், மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் அயராது போராடி வருகின்றன.

இடதுசாரி கட்சிகளின் வலுவான குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட, வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் முயற்சிகளை முறியடித்து தமிழகத்தில் போட்டியிடும் இடதுசாரி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x