Published : 24 Apr 2014 12:52 PM
Last Updated : 24 Apr 2014 12:52 PM

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி

மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, காலை 10.55 மணியளவில் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் சாரதா பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: "மக்களவை தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என நம்புகிறேன். இந்தத் தேர்தல் திமுகவுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே சாதகமாக இருக்குமென்று நம்புகிறேன். கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறும். அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி. எனவே அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை" என்றார்.

முன்னதாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஆளுங்கட்சிக்கு எதிராக அலை:

சென்னை மயிலாப்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டிய தேவை இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x