Published : 10 Apr 2014 03:05 PM
Last Updated : 10 Apr 2014 03:05 PM
மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்ப்பதாகக் கூறிக் கொண்டு வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுத்து நிறுத்துமாறு பாமக குழு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவினர் வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்ப்பதாகக் கூறி, அந்த வீட்டில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்; சில இடங்களில் பணம் வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கிவருகின்றனர். வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான தங்களிடமும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடமும் முறைப்படி அனுமதி பெற்றிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முடிவடைந்து விட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர்கள் பட்டியல் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்குமேல் வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்களையும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. இத்தகையநிலையில், வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பதாக கூறி வீடுவீடாக ஆளுங்கட்சியினர் செல்வது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட தேர்தல்விதிமீறல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பது,ஆளுங்கட்சியினரின் சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதாகவும், அங்கீகாரம் அளிப்பதாகவுமே அமையும்.
தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியினரின் இந்த சட்டவிரோத செயல்களை மற்ற கட்சியினர் எவரேனும் தடுக்க முயலும் பட்சத்தில், இருதரப்பிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு, அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறுவதற்கான
ஆபத்தும் உள்ளது. எனவே, வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்காக அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏதேனும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்து வீடுவீடாக செல்ல தடை விதிக்க வேண்டும்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT