Published : 20 Apr 2014 11:53 AM
Last Updated : 20 Apr 2014 11:53 AM
காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பரிசீலித்தால், மூன்றுமே சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியதையும் கருத்தில் கொண்டே தொழில்வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகக் கூறுகின்றன. அத்துடன் சமூகநீதி, வேலை வாய்ப்பு போன்றவை தொடர்பான உறுதிமொழிகளும் அடக்கம். ஆனால், சுற்றுச்சூழலைக் காப்பது என்பதன் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாமலேயே வாக்குறுதி அளித திருக்கிறார்கள். இதில் ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டும் சுற்றுச்சூழலைக் காப்பதில் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.
குறுகிய கண்ணோட்டம்
ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பில் ஏற்பட்ட உயர்வும்கூட சுற்றுச்சூழலைக் கெடுத்துப் பெறப்படுவதால் வருவாயைவிட இழப்பே அதிகமாக இருக்கிறது. அசுத்தமான குடிநீரைக் குடிப்பதாலும், தொழில்நிறுவனங்களின் கழிவு வாயுக்கள் கலந்த காற்றைச் சுவாசிப்பதாலும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட இந்த மூன்று கட்சிகளும் முன்வைக்கும் யோசனைகள் என்ன? காங்கிரஸ், பா.ஜ.க-விடம் குறிப்பிடும்படியான திட்டங்கள் ஏதுமில்லை. ஆம் ஆத்மி கட்சி ஆழமாகப் புரிந்துகொண்டாலும் அவர்களிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு போன்ற லட்சியங்களைத்தான் காங்கிரஸும் பா.ஜ.க-வும் பேசுகின்றனவே தவிர அவற்றை அடையும் வழிமுறைகளைப் பற்றி அதிக அக்கறை செலுத்தவில்லை. பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் எட்டப்பட வேண்டும், எதிர்கால சந்ததியினருக்கு சேதமில்லாத சுற்றுச்சூழலை விட்டுச்செல்ல வேண்டும் என்கிறது ஆம் ஆத்மி. அது எப்படி என்று சொல்லவில்லை.
தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தடையில்லாமல், சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் விரைவாக ஒப்புதல் அளிக்கும் நிர்வாக நடைமுறையைக் கொண்டுவருவோம் என்கிறது பா.ஜ.க. கனிமவளம், வனவளம், நிலவளம் ஆகியவற்றைத் தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்காகத் தாரைவார்த்து மக்களுக்குச் சூழல் சீர்கேடுகளைப் பரிசாகத் தருவதற்கே இது உதவும். வனவளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகத் தொழில் தொடங்கத் தாமதமாக அனுமதி தருவதைச் சகித்துக்கொள்ளாத மத்தியதர வர்க்கம், அது நம் எதிர்காலத்துக்கே ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு, மக்கள் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இதை ஆம் ஆத்மி மட்டுமே புரிந்துகொண்டுள்ளது. கிராம சபைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தொழில் நிறுவனங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று தனது தேர்தல் அறிக்கையில் அது குறிப்பிட்டிருக்கிறது. இதர வளங்களுக்கும் அதே நிபந்தனையை அது விதிக்கிறது.
அதிகாரப் பரவல் அவசியம்
உள்ளூர் மக்களுக்கு அவரவர் பகுதி வனங்களைக் காப்பதில் அதிக உரிமையும் பொறுப்பும் இருக்கும்வகையில் வனப்பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கூறுகிறது. வனப்பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்செய்ய வேண்டும் என்று மட்டும் காங்கிரஸ் கூறுகிறது. காடுகளையும் நிலங்களையும் நீர்வளங்களையும் தொழில்துறைப் பயன்பாட்டுக்காகத் திருப்பிவிடுவது குறித்து ஏதும் பேசவில்லை. பா.ஜ.க. இதை அறவே புறக்கணித்து விட்டது. வளர்ச்சிப் பணிகளுக்கு நிபந்தனையற்ற நிதியுதவி, செய்து முடித்த பணிக்கு மக்கள் சமூகத்தின் ஒப்புதலுடன் பணப் பட்டுவாடா, சட்டங்களை வகுப்பதில் சமூகத்துக்கு முக்கியப் பங்களிப்பு ஆகியவற்றை ஆம் ஆத்மி வலியுறுத்துகிறது.
கிராமசபைகளுக்கு அதிக நிதியதிகாரம், முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும் என்று காங்கிரஸும் பா.ஜ.க-வும் கூறுகின்றன. ஆனால் என்ன பணி, எதற்கு முன்னுரிமை என்பதையெல்லாம் கூறவில்லை. பல விஷயங்களில் மக்கள் நடத்திய போராட்டங்களிலிருந்து பெற்ற அனுபவங்களை எல்லாக் கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் பிரதிபலித் துள்ளன. தொழிலாளர்களை மையமாக வைத்து உழைப்புக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று வேலைவாய்ப்புக் கொள்கைகள் குறித்துக் கூறுகின்றன. அதே சமயம் வெளி நாட்டு, உள்நாட்டுத் தொழிலதிபர்களுக்கு வரம்பு கட்டுவது குறித்து ஏதுமில்லை.
இவ்வாறு அரசியல் பொருளாதார அதிகாரப் பகிர்வு, பொறுப்பேற்பு நிர்வாகம், மனிதவள மேம்பாட்டுக்கு மாற்றுத் திட்டம், வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆகியவை குறித்து முக்கியத்துவம் செலுத்தாமல் மொத்த உற்பத்தி மதிப்புக்கு மட்டுமே காங்கிரஸும் பா.ஜ.க-வும் முன்னுரிமை கொடுத்துள்ளன.
பிசினஸ்லைன், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT