Last Updated : 17 Apr, 2014 10:47 AM

 

Published : 17 Apr 2014 10:47 AM
Last Updated : 17 Apr 2014 10:47 AM

இந்தியா என்ன சொல்கிறது?- தெற்கு

தென்னிந்தியப் பயணத்தை சென்னையில் தொடங்கவில்லை; முடித்தேன். வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இந்த இந்தியச் சுற்றுப்பயணத்தின் அடைவிடத்தை அடைந்தேன்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பயணிப்பதற்கும் தெற்கில் பயணிப்பதற்கும் ஒரு கவனிக்கத்தக்க வேறுபாடு உண்டு. ரயில் பயணத்திலோ, பஸ் பயணத்திலோ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒரே மாதிரி நிலத்தைத் தெற்கில் நாம் பார்க்க முடியாது. பசுமையான வயல்களோ, மலைகளோ, ஆறுகளோ, வறண்டவெளியோ அது எதுவானாலும் மாறி மாறி காணக் கிடைப்பது தென்னிந்தியாவின் புவியியல் அமைப்பை மட்டும் காட்டுவதல்ல; சமூகப் பொருளாதாரப் போக்கையும் காட்டுவது.

இந்தியாவின் ஏனைய நான்கு எல்லைப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுவை, லட்சத் தீவுகளை உள்ளடக்கிய தென்னிந்தியா ஓரளவுக்கு நாம் செல்ல வேண்டிய சரியான திசையில் இதுவரை சென்றிருப்பதாகவே தோன்றுகிறது இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் தெற்கில் ஒருபுறம் இன்னமும் சரிபாதிப் பேர் விவசாயத்தைத் தொடர்கின்றனர்;

மறுபுறம் தொழில்துறையின் உச்சமான தகவல் தொழில்நுட்பத் துறையில் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது. சுதந்திரத்துக்குப் பின் தெற்கின் பெரும்பாலான தலைவர்கள் முன்னெடுத்த கலப்புப் பொருளாதாரக் கொள்கையின் வெற்றி என்றுகூட இதைக் கூறலாம். இதன் மிகச் சிறந்த வெளிப்பாட்டை கேரளத்தில் பார்த்தேன். கேரளம்தான் இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்திலும் மனித வள மேம்பாட்டிலும் சமமான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் மாநிலம்.

அரசியல் பங்கேற்பின் அவசியம்

கேரளம் சென்றபோது மாநிலத்தின் எல்லா இடங்களிலும் நல்ல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. “முதலில் நாம் இருக்குமிடம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல காற்று, நல்ல தண்ணீர், பிள்ளைகள் படிக்க நல்ல கல்விக்கூடங்கள், போக்குவரத்து வசதிகள், நல்ல மருத்துவமனைகள். அப்புறம்தான் எல்லாமும்.

எங்கள் தலைவர்களிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவதும் இதைத்தான். தொழிற்சாலைகளையோ, பிரமாண்டமான பாலங்களையோ அல்ல. பொதுவாகவே மலையாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். ஒரு தபால் அட்டையில் காரியம் சாதிக்க மலையாளிகளுக்குத் தெரியும். பக்கத்து மாநிலங்களில் நடக்கும் நல்ல விஷயங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் கவனிக்கிறோம். அவற்றை இங்கு கேட்கிறோம். உலகிலேயே ஜனநாயகரீதியில் இடதுசாரிகள் ஆட்சி அமைத்த இடம் இது.

இன்னமும் அவர்கள் வலுவாக இருப்பதால், பொதுஜன விரோத நடவடிக்கைகளை அரசாங்கம் அவ்வளவு சீக்கிரம் இங்கு கொண்டுவந்துவிட முடியாது” - இப்படிப் பேசிய அந்தோனி கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி.

தென்னிந்தியா பொருளாதாரரீதியாகச் செய்த தவறுக்கான அடையாளம் தெலங்கானா. தனி மாநில அறிவிப்பு வெளியாகிவிட்ட உற்சாகம் கரை புரள மாற்றத்துக்காகக் காத்திருக்கிறது இந்த வறண்ட நிலம். கரீம்நகரைச் சேர்ந்த சாரையாவிடம் பேசியபோது அவர் சொன்னார்: “இனிமேலும் யாரும் யாரையும் அழுத்தி உட்கார்ந்திருக்க முடியாது என்பதற்கான அடையாளமாகவும் தெலங்கானாவைப் பார்க்க வேண்டும்.

கடைசியில் இந்த ஏழைகளின் போராட்டம் ஜெயித்துவிட்டது. இனி அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் தெலங்கானா என்ற பெயர் உச்சரிக்கப்படும். தனி மாநிலக் கோரிக்கை அவர்களை வழிக்குக் கொண்டுவரும்.”

கேரளமோ, தெலங்கானாவோ... உணர்த்தும் விஷயம் ஒன்றே. தென்னிந்தியாவின் பரவலான வளர்ச்சிக்கு மக்களிடம் உள்ள அரசியல் விழிப்புணர்வும் பங்கேற்பும் முக்கியமான காரணம். பாண்டிச்சேரியிலோ, திருவனந்தபுரத்திலோ, பெங்களூருவிலோ, ஹைதராபாத்திலோ மக்களிடையே காணக் கிடைக்கும் ஆராவாரமான, ஆர்ப்பாட்டமான தேர்தல் பிரச்சாரங்களை நாட்டின் வேறு பகுதிகள் எங்கிலும் பார்க்க முடியாததற்கு இதுவே அடிப்படையான காரணம் என்று நினைக்கிறேன்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் வெறும் ஆறுக்கு ஆறு பரப்பளவைக் கொண்ட சின்ன இடம் அது. அங்கு தையல் கடை நடத்துகிறார் ஆறுமுகம். தி.மு.க-வைச் சேர்ந்தவர். எண்பதுகளில் நடக்கக்கூடச் சிரமப்படும் நிலையில் இருக்கிறார். கண்களும் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆனால், தன்னாலான தேர்தல் பணி என்று கட்சிக்குக் கொடி தைத்துக்கொண்டிருக்கிறார்.

“கழகம் ஆட்சிக்கு வந்தால்தான் நாம் விரும்புகிற காரியங்கள் நடக்கும்” என்பதைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் அவரிடத்திலிருந்து வெளிப்படவில்லை. ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சந்தித்த பீமராவ் ஒரு தியாகி. நூறை நெருங்கிக்கொண்டிருக்கிறார். காந்தி குல்லாவுடனும் கையில் காங்கிரஸ் கொடியுடனும் பார்ப்பவர்களிடம் எல்லாம் “கைக்கு ஓட்டு போடுங்கள் - நாட்டு ஒற்றுமைக்கு காங்கிரஸ் முக்கியம்” என்று கும்பிடு போடுகிறார். “நான் கட்சி உறுப்பினர் எல்லாம் இல்லை;

ஆனால், காங்கிரஸ் தொண்டன். தப்பு செய்யும்போது கேள்வி கேட்பேன், அது உரிமை. இப்போது கட்சிக்காக ஓட்டு கேட்பது கடமை” என்கிறார். ஆனால், இப்படிப்பட்ட சாமானியர்களின் அரசியல் செயல்பாடுகள் எல்லாம் இன்றைக்குக் காலாவதியாகிக்கொண்டிருப்பது தென்னிந்திய அரசியலின் கவலைக்குரிய போக்கு.

மாறும் பார்வைகள்

பெங்களூரு பொறியாளர் நாராயணன் சொல்கிறார்: “கர்நாடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ரெட்டி சகோதரர்கள் மாநிலத்தின் கனிம வளங்களை எப்படிச் சூறையாடினார்கள் என்பதை ‘லோக் ஆயுக்தா’ மூலம் உலகமே பார்த்தது. மாநிலத்துக்கு அவர்களால் 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

ஒரு அரசாங்கமே இந்தப் பிரச்சினையால் கவிழ்ந்தது. ஆனாலும், இன்றைக்கும் அவர்கள் செல்வாக்கை ஒன்றுமே செய்ய முடியவில்லையே? பின்னிலிருந்து இயக்கிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? ஏன் தமிழ்நாட்டிலும்கூட அலைக்கற்றை முறைகேட்டில் வழக்கை எதிர்கொள்ளும் ஆ.ராசாவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்களே... இவர்களைப் போன்றவர்கள் துணிச்சலாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும்போது சாமானியர்கள் ஓரங்கட்டப்படுவது இயற்கையானதுதானே? இந்த ஓரங்கட்டப்படுதல் சாதாரண விஷயம் அல்ல.

இதுதான் நாளைக்கு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளில், அரசாங்கத்தின் போக்குகளில் எதிரொலிக்கும்.”

தமிழக விவசாயிகளின் வலுவான குரல்களில் ஒன்றான மன்னார்குடி எஸ்.ரங்கநாதனும் இதையே சொன்னார். காவிரிப் படுகை வயல்கள் எங்கும் இப்போது நடுநடுவே மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கான குழாய்களைச் சுமந்து நிற்கின்றன. அந்தக் குழாய்களைக் காட்டிச் சொன்னார்:

“தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் இந்தக் காவிரிப் படுகை. இங்கே இப்படி ஒரு திட்டத்தை சர்க்கார் கொண்டுவருகிறது என்றால் என்ன அர்த்தம்? அதன் பார்வையில் குழப்பம் என்றுதானே அர்த்தம்? தென்னிந்தியாவின் வளத்துக்கு இன்னமும் விவசாயம்தான் அடித்தளம். ஆனால், அந்த அடித்தளம் இப்போது தகர்ந்துகொண்டிருக்கிறது. தெற்கு எதிர்கொள்ளவிருக்கும் பெரிய ஆபத்து என்று இதைச் சொல்வேன்.”

கூட்டாட்சித் தத்துவம் செயல்படுகிறதா?

பொதுவாகவே தென் மாநிலங்கள் எங்கும் பரவலாக ஒரு குரலைக் கேட்க முடிகிறது: “நாட்டுக்கு எங்கள் மாநிலத்தின் பங்களிப்பைச் செய்துவிடுகிறோம். ஆனால், நாடு எங்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கிறதா?”

முக்கியமாக கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரை, காவிரி, வைகை போன்ற தென்னகத்தின் நதிகள் கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா அளவுக்குப் பிரமாண்டமானவையோ ஜீவநதிகளோ அல்ல என்பதால், நதிநீர்ப் பிரச்சினைகளை விவசாயிகள் பெரும் கவலையோடு பார்க்கிறார்கள். தமிழகத்தில் இந்தக் குரலும் கவலையும் தீவிரம் அடைகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற ஜீவாதாரப் பிரச்சினைகளில்கூட அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படுவதும் மத்திய அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் தேர்தல் பிரச்சாரங்களில் எதிரொலிக்கிறது. தேர்தல்கள் தீர்வைத் தருகின்றனவோ இல்லையோ, நிச்சயம் மாற்றத்தைத் தரும் என்றே மக்கள் நம்புகிறார்கள்.

நாடு முழுவதும் இப்படி எத்தனை எத்தனை நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், துரோகங்கள்… இந்தியா எல்லாவற்றுக்கும் பதில்களை வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது!

தொடர்புக்கு: samas@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x