Published : 23 Apr 2014 09:44 AM
Last Updated : 23 Apr 2014 09:44 AM

திருப்பூரில் சம பலத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க.: 3-வது இடத்துக்கு தள்ளப்படுமா தி.மு.க.?

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் சம பலத்தில் இருப்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி நிலவும் எனக் கூறப்படுகிறது.

திருப்பூரில் அ.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ஆம்-ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அ.தி.மு.க.-வின் வி.சத்தியபாமாவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.-வின் என்.தினேஷ்குமாருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர் திருப்பூருக்கு நன்கு அறிமுகமானவர் என்பதுடன், அவரின் சுறுசுறுப்பான பிரச்சாரமும் பலம் சேர்க்கிறது. அதேபோல அ.தி.மு.க.-வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது.

திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதாலும், இந்த முறை தொழில்துறையினரின் ஆதரவு பா.ஜ.க.-வுக்கு பலமாக இருக்கும் என்பதாலும் தே.மு.தி.க. வேட்பாளர் என்.தினேஷ்குமார் கணிசமான வாக்குகளைப் பெறுவார். அதேசமயம் அ.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் கோபி, பெருந்துறை, அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெறும் வாக்குகளை பொருத்துதான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.

தி.மு.க. வேட்பாளரான எம்.செந்தில்நாதனுக்கு (74) சிறுபான்மையினர் ஆதரவு இருப்பினும், பலருக்கும் வேட்பாளர் யார் என்பதே தெரியாத நிலையில்தான் அவரது பிரச்சாரம் அமைந்ததாகக் கூறப்படுகிறது. தி.மு.க. 2-வது இடத்தை பெறுவதற்கே போராட வேண்டியிருக்கும். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கும் 4, 5-வது இடங்களைப் பிடிப்பதற்கு கடும் போட்டி இருக்கும்.

அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்பதே இந்தத் தொகுதியின் இறுதிகட்ட நிலவரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x