Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

ஈரோட்டில் ஜெயிக்கப்போவது யாரு? இறுதிக்கட்ட அலசல்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டியுள்ளனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக சார்பில் செல்வகுமார சின்னையனும், திமுக சார்பில் பவித்ரவள்ளியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியும், காங்கிரஸ் சார்பில் கோபியும், ஆம் ஆத்மி சார்பில் குமாரசாமியும் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமையன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வேட்பாளர்களின் சாதகபாதகங்கள் குறித்த அலசல்:

ஐந்து பிரதான கட்சிகள் களத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக, மதிமுக வேட்பாளர்கள் மட்டுமே கணிசமான வாக்குகளை பெற்று வெற்றிக்கோட்டை நோக்கி நகரும் நிலையில் உள்ளனர். இதில் திமுக வேட்பாளரான பவித்ரவள்ளி கட்சிக்கும், தேர்தலுக்கும் புதியவர். காங்கேயம் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த இவருக்கு திமுக ஓட்டுவங்கியோடு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளால் தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் நிலவும் உள்ளடி வேலைகளால், தேர்தல் பணியில் சுணக்கம் இருந்து வருகிறது. இவர் பெறும் வாக்குகள் தொகுதியில் திமுகவின் பலத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

தேர்தலின் இறுதி கட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த செல்வகுமார சின்னையனுக்கும், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் அறிமுகம் இல்லை, கூட்டணி கட்சிகள் இல்லை, கட்சியில் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றாதது, உள்ளாட்சி அமைப்பினரின் செயல்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை போன்ற பல காரணங்கள் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு இழுத்தாலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இந்த தொகுதி வாக்காளர்களின் விருப்பத்திற்குரிய சின்னமாக இருந்து வருவது இவரை வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்லவுள்ளது.

தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர், தேமுதிக, பாஜக, கொமதேக என கூட்டணி கட்சிகளின் பலம், மோடியின் பிரச்சாரம், விவசாய அமைப்பினரின் ஆதரவு கணேசமூர்த்திக்கு உள்ளது. இருப்பினும், தேர்தல் களத்தில் வேகம் குறைந்த செயல்பாடு காரணமாக முயல் -ஆமை பந்தயக்கதையில் ஆமை ஜெயித்த கதையாக தேர்தல் முடிவு மாறிவிடவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் தொகுதியை நன்கறிந்த வாக்காளர்கள். பிரச்சாரம் செய்ய கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் கட்சியினருடன் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x