Published : 20 Apr 2014 11:41 AM
Last Updated : 20 Apr 2014 11:41 AM

வாரணாசியில் நடந்துகொண்டிருப்பது இந்தியாவின் ஆன்மாவுக்கான போர்: யோகேந்திர யாதவ் நேர்காணல்

கால் டாக்சியில் பயணம் செய்தபடி பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவரைப் பார்த்து எவ்வளவு காலம் இருக்கும்? இந்தியாவில் இதுவரை இடதுசாரிக் கட்சிகளின் அடையாளமாகவே இருந்த எளிமையை இப்போது தன்வசமாக்கியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அறிவுஜீவிகள், களப்போராளிகள் என்று களைகட்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர் யோகேந்திர யாதவ். இந்திய அறிவுலக வட்டங்களில் மறுக்க முடியாத ஒரு பெயர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்துக்காக சென்னை வந்திருந்தார் யாதவ். பிரச்சாரத்துக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கால் டாக்சியில் பயணித்துக்கொண்டிருந்தவரிடம் பயணத்தின் ஊடாக எடுத்த பேட்டி.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படியொரு எழுச்சியின் முடிவில் அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததைப் பலரும் பின்னடைவாகவே பார்க்கிறார்கள். இப்போது அந்த எழுச்சி இல்லைதானே?

டெல்லியில் நாங்கள் வென்ற பிறகு நாடெங்கிலும் எங்களுக்கு மரியாதையும் ஆதரவும் கூடியது. கேஜ்ரிவால் ராஜினாமா செய்த பிறகு - அதை நான் பின்னடைவாகப் பார்க்கவில்லை, அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் - அது குறைந்தது என்பது உண்மைதான். நாங்கள் உச்சத்திலிருந்து இறங்கியிருக்கலாம். ஆனால், முழுமையாக விழுந்துவிடவில்லை. இப்போதும் எங்களுக்குத் தொடக்கத்தில் இருந்ததைவிடக் கூடுதல் ஆதரவு இருக்கவே செய்கிறது. இல்லையென்றால், தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் 24 வேட்பாளர்களை எங்களால் நிறுத்தியிருக்க முடியுமா? டெல்லி தேர்தலுக்கு முன்பு அதை யோசித்திருக்கக்கூட முடியாது. டெல்லி தேர்தல் கொடுத்த ஆற்றல்தான் தமிழ்நாடு போன்ற இடங்களில் எங்களைச் சிறிய அளவிலாவது காலூன்ற வைத்திருக்கிறது.

ஆனால், டெல்லி அரசியல் களத்திலிருந்து தேச அரசியல் களத்துக்கு வெகு சீக்கிரம் வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. அரசியலைப் பொறுத்தவரை, வாய்ப்புகள் ஏற்படுவது உங்கள் திட்டப்படி அல்ல. யாரும் எழுதாத வரலாற்றின் திட்டப்படிதான் வாய்ப்புகள் உருவாகின்றன. டெல்லி தேர்தலும், அதற்கு தேசம் ஆற்றிய எதிர்வினையும் திடீரென்று ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனமான விஷயமாக இருந்திருக்காது. மிகமிக நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு புதிய, அனைத்திந்திய கட்சியை உருவாக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டெல்லியில் இருப்பதுபோல எங்களது நிலை பிற மாநிலங்களில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், எங்களுக்கு உத்வேகமான தொடக்கம் வாய்த்தது. அரசியலில் அது அமைவது அபூர்வமான விஷயம்.

இதுவரை தேர்தல் களம் காணாத பல பெண் களப் பணியாளர்களை, போராளிகளைக் களமிறக்கியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் காப் பஞ்சாயத்துகளுக்கு ஆதர வாகப் பேசுகிறீர்கள். கேஜ்ரிவால் வெளிப்படையாகக் கோயில் களுக்குச் செல்கிறார். ஆம் ஆத்மியில் ஒரு பகுதியினர் மிதவாதிகளைக் கவர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

காப் பஞ்சாயத்து பற்றிய எனது பேச்சு முழுக்க முழுக்கத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில், ஹரியாணாவில் இந்தி பத்திரிகைகளில் யோகேந்திர யாதவ் காப்புகளை எதிர்க்கிறார் என்று வெளியானது. அதனடிப்படையில், காப் பஞ்சாயத்துகள் எனக்கு மிரட்டல் விடுத்தன. ஆங்கிலப் பத்திரிகைகளில் அதே அறிக்கை நான் காப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக வெளியானது. நான் சொன்னது இதுதான்: இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் மதத்துக்கும் என்று ஒரு சமூக அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஒத்த கருத்தின் மூலம் ஒரு முடிவை எட்டுவார்கள் என்றால், அதை அனுமதிக்கலாம், வரவேற்கலாம்.

ஆனால், ஒத்த கருத்து திணிக்கப்படும்போது அதை அனுமதிக்க முடியாது. சட்டம் மீறப்படும்போது அதை அனுமதிக்க முடியாது. கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதைத்தான் நான் சொன்னேன். இது காப்புகளுக்கு ஆதரவானதா எதிரானதா என்று நீங்கள் முடிவுசெய்துகொள்ளுங்கள். கேஜ்ரிவாலின் மதச் சடங்குகளைப் பொறுத்தவரை, நான் பிரச்சாரங்களுக்குப் போகும்போதுகூட ஆதரவாளர்கள் என்னைக் கோயில்களுக் கும் தர்காக்களுக்கும் குருத்துவாராக்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களது நம்பிக்கைகளை மதிக்கிறேன். அடுத்தவருடைய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் பழங்கால, கடினமான மதச்சார்பற்ற தன்மையே ஒருவிதத் திமிர் என்று நான் நினைக்கிறேன்.

இந்த நாட்டை ஒன்றாக வைத்திருப்பது சாதிகளுக்கிடையில், மதங்களுக்கிடையில் இருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் மட்டுமல்ல, கடவுளை நம்புபவர்களுக்கும் நம்பாதவர்களுக்கு மிடையிலான பரஸ்பர மரியாதையும்தான். அதனால், கேஜ்ரிவால் செய்வதில் தவறொன்றும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. இதெல்லாம் எங்களைப் பாரம்பரிய, விஞ்ஞானபூர்வமான, புரட்சிகரமான இடதுசாரிச் சிந்தனை யிலிருந்து மாறுபடுத்திக் காட்டும்தான். ஆனால், நாங்கள் அதுதான் என்று ஒருபோதும் சொன்னதில்லையே.

ஆனால், இடதுசாரி இயக்கம் உங்களுக்கு இயற்கையான கூட்டணியாக அமையும் இல்லையா?

ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பது, கடைசி மனிதனின் தேவைகளை நுண்ணுணர்வுடன் புரிந்துகொள்வது, கடைசி மனிதரை முன்னிறுத்துவது இவைதான் இடதுசாரிச் சிந்தனைகள் என்றால், நாங்கள் நிச்சயமாக இடதுசாரிகள்தாம். இந்த நாட்டில் தீவிரமான அரசியலை முன்னெடுக்கும் யாரும் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையாத நிலையில் இருக்கும் ஒரு நாட்டில், நீங்கள் எப்படி இடதுசாரியாக இல்லாமல் இருக்க முடியும்? ஆனால், இதெல்லாம் நிறைவேற ஒரு குறிப்பிட்ட பாதையை இடதுசாரிச் சிந்தனை வலியுறுத்துகிறது. அரசுத் தலையீட்டை அது வலியுறுத்துகிறது, பொதுத்துறைதான் சிறந்தது என்று சொல்கிறது. இதுதான் இடதுசாரிச் சிந்தனை என்றால், நாங்கள் இடதுசாரிகள் இல்லை. நாங்கள் போய்ச்சேர வேண்டிய இடம்பற்றிய பிடிவாதமான கருத்தாக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை அடைவதற்கான பாதையைப் பற்றி ஏன் அப்படிப்பட்ட கருத்தாக்கங்கள் இருக்க வேண்டும்? இந்தியாவைப் பொறுத்தவரை இடதுசாரி என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குறிக்கிறது. குறிப்பாக, கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் அரசியல் நிறுவனத்தை அந்தக் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட அவர்கள் தூய்மையானவர்களாகவும் ஊழல் புரியாதவர்களாகவும் இருந்தாலும் எந்தவொரு நேர்மையான அரசியல் நோக்கரும் - குறைந்தது கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் - அவர்கள் முழுமையாக ஊழலிலிருந்து விடுபட்டவர்கள் என்று சொல்ல மாட்டார்கள்.

இடஒதுக்கீடு, அணு உலைகள் போன்றவற்றைக் குறித்துக் கட்சிக்குள் ஏதாவது குழப்பம் இருக்கிறதா?

இல்லை. எங்களது தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்சினைகள்குறித்து ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கிறோம். ஆனால், நாங்கள் நாக்பூரிலோ சோவியத் ரஷ்யாவிலோ உருவான கட்சி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முழுவதும் வெவ்வேறான பின்னணிகளிலிருந்து, முழுவதும் வெவ்வேறான நம்பிக்கைகளிலிருந்து நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். எங்களுக்கான பொதுக்களத்தைத் தேடும் முயற்சியில் இருக்கிறோம். நிச்சயம் அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருக்கும். உண்மையில் எங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஆனால், கடந்த ஒரு வருடத்தில் அடிப்படையான விஷயங்கள்பற்றி தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு உங்கள் செயல்திட்டம் என்ன?

எதிர்காலத்துக்கான கட்சி நாங்கள். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசியல் சூழல் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் எழுச்சி, தமிழக அரசியலில் ஒரு வரலாற்று நகர்வுக்கான அடையாளம். அது சமூகத்தில், பொருளாதாரத் தளத்தில், அரசியலில் பல அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், இப்போது அந்த இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சீரழிந்துவிட்டன. சமூக நீதிக்காக அவர்கள் இப்போது நிற்கவில்லை. அதிகாரத்துக்காகவே நிற்கிறார்கள். பா.ஜ.க-வுடன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டுவைத்ததன் மூலம் அவர்களது மதச்சார்பற்ற அரசியலும் கேள்விக்குறியாகிவிட்டது. தமிழ்நாடு ஒரு புதிய அரசியலுக்குத் தயாராக இருக்கிறது. அதற்கு இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று, பா.ஜ.க. இந்தத் தேர்தல் அதற்கு முக்கியமானதாக இருக்கலாம். பா.ஜ.க., தமிழ்நாட்டை ஒரு வெற்று இந்திய தேசியத்துக்குள் நுழைக்க முயற்சிக்கும். இன்னொரு பக்கம், தமிழ்த் தேசிய ஆற்றலை, சமூகநீதி ஆற்றலை இந்திய தேசியத்துடன் அர்த்தபூர்வமான ஒரு கலந்துரையாடலில் ஈடுபட வைக்கும் தேசியக் கட்சியொன்றின் தேவையும் இருக்கிறது. இதுதான் 1940-களிலும் 50-களிலும் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழகத்தில் இருக்கும் அரசியல் வெறுமையைப் பூர்த்திசெய்வோம் என்று நம்புகிறோம்.

வாரணாசியில் உங்களது செயல்திட்டம் என்ன?

தேசமெங்கும் உள்ள தன்னார்வலர்களைக் கொண்டுவந்து, மோடிக்குக் கடுமையான போட்டியாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது செயல்திட்டம். கேஜ்ரிவால் தேர்தலைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. நாங்கள் வாரணாசியைத் தேர்ந்தெடுக்கவில்லை. மோடிதான் தேர்ந்தெடுத்தார். நாங்கள் சொல்ல விரும்பியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: இந்தியாவின் கடுமையான ஆன்மாவுக்கான இந்தப் போரில் அவர் எங்கு சென்றாலும் போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தச் செய்தியைச் சொல்ல, உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியை விட வேறு எந்த இடம் பொருத்தமானதாக இருக்கும்? மோடி அவ்வளவு எளிதாக வென்றுவிட மாட்டார் என்பதை மட்டும் நான் உறுதியாகக் கூற முடியும்.

ஒரு தேர்தல் கணிப்பு நிபுணராகச் சொல்லுங்கள். மோடி அலை வீசுகிறதா?

நான் கணிப்புகள் செய்வதிலிருந்து அதிகாரபூர்வமாக விலகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதுபற்றிச் சொல்ல விருப்பமில்லை. ஆனால், நாட்டில் ஒருவரது பெயரில் அலை வீசுகிறது என்று சொல்லப்படுகிறது; அவரோ ஒரு தொகுதியில் நின்றால் போதும் என்று நினைக்கவில்லை. அப்படியென்றால் என்ன மாதிரியான அலை இது? உலகெங்கும் உள்ள தேர்தல் கணிப்பு நிபுணர்கள் தொடர்ந்து செய்யும் தவறு, ஒரு புதிய கட்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததுதான். இங்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், கணிப்பு நிபுணர்களுக்குப் பல ஆச்சரியங்களை ஆம் ஆத்மி கட்சி தரும்.

கவிதா முரளிதரன்,தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x