Published : 13 Apr 2014 02:18 PM
Last Updated : 13 Apr 2014 02:18 PM

அதிமுக, திமுகவின் எல்லை தமிழகம் வரை மட்டும்தான்: ப.சிதம்பரம் பேச்சு

அதிமுக, திமுக கட்சிகள் மத்தியில் ஆட்சியைத் தீ்ர்மானிக்கும் சக்திகள் அல்ல. அவற்றின் எல்லை தமிழகம் வரை மட்டும்தான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் சனிக்கிழமை இரவு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

பாஜக தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீட்டைப் பற்றி ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நச்சுக் கருத்துக்கள் பல உள்ளன. வெவ்வேறு மதங்கள் கொண்ட இந்திய நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில் சட்டம் அமலாக்கம் ஆகியவை சிறுபான்மையினர் நலனைப் பாதிக்கும் செயலாகும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவாகும்.

அதிமுக, திமுக கட்சிகளின் எல்லை தமிழகம் வரை மட்டும்தான். அவர்கள் மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கா விட்டால் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சிதான் அமையும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x