Published : 13 Apr 2014 12:00 AM
Last Updated : 13 Apr 2014 12:00 AM
1972-ல் அரசியலுக்கு வந்து, 42 ஆண்டுகளில் தேர்தலில் வேட்பாளராகவும், தலைமை முகவராகவும், கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம் மற்றும் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி என்று களப்பணி ஆற்றிய நினைவுகள் பளிச்சிடுகின்றன. அந்த வகையில் தேர்தல்குறித்த பசுமையான நினைவுகள் சிலவற்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
1950-ன் இறுதியில், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஆலங்குளம், சிவகாசி, சாத்தூர் ஆகிய நான்கு நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளும் கூடும் இடத்தில்தான் எங்கள் கிராமம் இருக்கிறது. 1950-களில் வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று ஓட்டு கேட்பதில்லை. கிராமத்தில் ஒரு பொதுவான இடத்திலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டுக்கோ வந்து கிராம மக்களிடம் “எனக்கு வாக்களியுங்கள்!” என்று சொல்லிவிட்டு வேட்பாளர்கள் போவார்கள். அப்போது அனல் கக்கும் பேச்சுகள், பிரச்சாரங்கள் இல்லை.
வண்ண வண்ண நோட்டீஸ்கள்
சாத்தூரில் காமராஜர், சிவகாசியில் எஸ்.ஆர். நாயுடு, கோவில்பட்டியில் வி.சுப்பையா, ஆலங்குளத்தில் வேலுச்சாமி, சங்கரன்கோவிலில் ஏ.ஆர். சுப்பையா முதலியார் போன்றோர் போட்டியிட்டபோது, எந்த விதமான சுவரொட்டியும் இல்லாமல், வெறும் சின்னங்களின் பெயர்களைச் சொல்கின்ற விதத்தில் பல வண்ணங்களில் அச்சிட்டு ‘பிட் நோட்டீஸ்'களாகக் கொடுப்பார்கள். வேட்பாளர் வரும்போது அவற்றை விநியோகிப்பார்கள். அந்த வண்ணவண்ண நோட்டீஸ்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பலரும் போட்டிபோட்டு வாங்குவார்கள்.
அந்நியோன்யமான வேட்பாளர்கள்
1962-ல் தேர்தலின்போதுதான் தேர்தலையும் அதன் ஆரவாரங்களையும் கவனிப்பதற்கான, புரிந்துகொள்வதற்கான வயது எனக்கு வந்தது. அப்போது சாத்தூரில் போட்டியிட்ட காமராஜர், புளியங்குடியில் போட்டியிட்ட ஊர்க்காவலன், சங்கரன்கோவிலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.ஏ. மஜீத், கோவில்பட்டியில் போட்டியிட்ட வேணுகோபால கிருஷ்ணசாமி நாயுடு, ஏ.பி.சி.வீரபாகு, திருநெல்வேலியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்றோருக்கு எனது உறவினர்கள் தேர்தல் பணியாற்றிய காட்சிகள் யதார்த்தமாக இருந்தன.
சுதந்திரா கட்சி நிர்வாகிகள் டி.எஸ். ஆதிமூலம், லட்சுமி மில் அதிபர் ஜி.கே. சுந்தரம், சுதந்திரா கட்சித் தலைவராக இருந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஜி. ரங்கா போன்றோர் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுடன் அமர்ந்து அளவளாவினர்.
அக்காலத்தில் வாகனங்கள் அவ்வளவு வசதி இல்லை. ‘பிளசர் கார்' என்று கிராமப்புறத்தில் சொல்லக் கூடிய, அம்பாசிடர் நிறுவனம் முதன்முதலாக அறிமுகப்படுத்திய நீள வண்டியில் வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருவார்கள். கிராமங்களில் பிரதானத் தெருக்களில் நடந்துவிட்டு, சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
பிரச்சாரத்தில் பேசப்பட்டவை
பிரச்சாரத்தில் குறிப்பாக குடிநீர், சாலை வசதி, பள்ளிக்கூட வசதிகள், மின்சாரம், தெருவிளக்கு, பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் மற்றும் பாசன வசதி போன்ற பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டது. பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குண்டுசோடாவும் கருப்பட்டி மிட்டாயும்
1962-ல் ஆலங்குளத்தில் சபாநாயகர் செல்லப்பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட ஆலடி அருணா எங்கள் கிராமத்துக்கு வரும்போது என்னுடைய சகோதரர், கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு, ஆலடி அருணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று கீழாப்பாவூர் குண்டு சோடா, கருப்பட்டி மிட்டாய், காராசேவ் கொடுத்து உபசரிப்பார். அப்போது ஆலடி அருணா, கதவிலும் சுவரிலும் ஒட்ட கருப்பு சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட உதயசூரியன் நோட்டீஸ்கள் தருவார். சட்டையில் குத்திக்கொள்வதற்கு உதயசூரியன் அட்டை கொடுப்பார். சுதந்திரா கட்சி நீல வண்ணத்தில் அச்சிட்ட நட்சத்திரச் சின்னம் அடங்கிய அட்டைகள், காங்கிரஸின் காளை மாட்டுச் சின்னம் பொறித்த அட்டைகள் கொடுப்பார்கள். தோழர் ஜீவானந்தம், பாலதண்டாயுதம் போன்றோர் அங்கு வரும்போது கூட்டம் நடக்கும். அப்போது சிவப்பு நிறத்தில் கதிர் அரிவாள் அட்டை தருவார்கள். அவற்றையெல்லாம் சேகரிப்பது அஞ்சல் தலைகள், தீப்பெட்டி லேபிள்களைச் சேகரிப்பதுபோல் இருந்தது. கிராமத்தில் சிறுவர்களுக்கு வேட்பாளர் ஆரஞ்சு சுளை போன்ற பெப்பர்மிண்ட்டுகள் அளிப்பதும் உண்டு.
நடையாய் நடந்து…
1962-ல் பல வேட்பாளர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் கிராமப்புறங்களில் ஐந்து மைல் தூரம் நடந்து சென்று வாக்காளரைச் சந்தித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்ய அவகாசம் அப்போது இருந்தது. சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஊர்க்காவலன், கிராமப்புறங்களில் பம்புசெட்டுகளில் குளித்துவிட்டு, தனது துணிகளைத் துவைத்துக் கட்டிக்கொண்டார். வாக்காளர்களைச் சந்திக்க இயலாமல் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மணலி கந்தசாமியும், பி. ராமமூர்த்தியும் தேர்தலில் வெற்றிபெற்றது மக்களிடம் வியப்பாகப் பேசப்பட்டது. நீதிக் கட்சியைச் சேர்ந்த பி.டி. ராஜன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுக் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்று, மதுரை தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய சென்னை வண்ணாரப் பேட்டை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தம் தனது பேச்சாற்றலால் வெற்றி பெற்றார்.
மிட்டாமிராசுகளை எதிர்த்து…
1967 தேர்தலில் ஒலிபெருக்கிக் குழாய் கட்டி, மஞ்சள் - கருப்பு வாடகை கார் என வேட்பாளர் சாலையில் வரும் காட்சியைப் பார்க்க முடிந்தது. மக்களை ஈர்க்கும் முழக்கங்கள், கொடிகள், வண்ண சுவரொட்டிகள், வாக்காளரைக் கவரும் போஸ்டர்கள், மேடைப் பேச்சுகள் ஆகியவற்றின் மூலம் தி.மு.க. பிரபலமானது. தி.மு.க. தொண்டர்கள் வெறும் தேநீரும் பன்னும் உண்டு இரவும் பகலும் உழைத்த தேர்தல் அது. மிட்டா மிராசுகளை எதிர்த்துப் போட்டியிட சாதாரண தி.மு.க. தொண்டர்களுக்கு வாய்ப்பு தேடிவந்தது.
இப்போது உள்ள ஃப்ளக்ஸ் போர்டுகள், பல பிட்டு சுவரொட்டிகள், கொடி தோரணங்கள் எல்லாம் அப்போது இல்லை. எந்தவித பந்தாவும் இல்லாமல் அப்போது தேர்தல் பிரச்சாரம் நடந்தது. தற்போது தேர்தலில் பணம் பிரதானம் என்ற நிலை உருவாகிவிட்டதை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
டீ செலவுக்கு…
1989-90 வரை தேர்தல் அன்று பணியாற்றும் தோழர்களுக்கு, வேட்பாளர் சார்பில் டீ செலவுக்காக, வாக்குச்சாவடி செலவுக்குக் கொடுக்கும் பணத்தைக் கூட, அநாகரிகம் என்று கருதி கிராமத்தில் வாங்க மறுத்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், வேட்பாளருக்கு அவர் போகும் கிராமங்களில் நிதி வசூலித்துக் கொடுத்தனர். 1990-91 வரை இந்த நிலை இருந்தது. 1996 பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிச் செலவுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் மனநிலை இருந்தது. அதன்பின் வந்த தேர்தல்களில் பொதுக் காரியம், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் போன்றவற்றுக்காக நாகரிகமாகப் பணம் கொடுக்கப்பட்டது.
100… 1,000…
1999 நாடாளுமன்றத் தேர்தலின் போது “இத்தனை பேர் தேர்தல் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சம்பளம் போட்டுக் கொடுத்தால் நல்லது” என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அது படிப்படியாக மாறி 100 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகப் போய் இன்று தேர்தல் செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. 1970 வரை நடைபெற்ற தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளர் தன் கையிலிருந்து வெறும் ரூ.1,000 - 2,000 செலவுசெய்திருக்கலாம்; நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ.3,000 - 4,000 வரை செலவுசெய்திருக்கலாம். இன்று கோடியில் செலவழிக்கிறார்கள். வேட்பாளர் தேர்தல் செலவுகளை ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதுபோல், இங்கும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும், இந்திய அரசுக்கும் இந்திரஜித் குப்தா குழு அறிக்கை வழங்கி சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன.
எல்லை கடந்து…
சாதி, மத, பூகோள எல்லைகளைக் கடந்து சென்னையைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தினமணி ஏட்டின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருக்குறள் முனுசாமியை எதிர்த்து திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் களம்கண்டார். கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, காமராஜரை எதிர்த்துத் திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல் காமராஜர் குடியாத்தத்திலும் போட்டியிட்டிருக்கிறார். மு. கருணாநிதி குளித்தலையிலும், க. அன்பழகன் திருச்செங்கோட்டிலும் போட்டியிட்டனர். கேரளாவைச் சேர்ந்த வி.கே. கிருஷ்ண மேனன் பம்பாயில் போட்டியிட்டார். இப்போதெல்லாம் இதை எண்ணிப் பார்க்க முடியுமா?
ரப்பர் முத்திரை…
வண்ண வாக்குப்பெட்டிகள், சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகள், இன்றைக்கு பொத்தானை அழுத்தக்கூடிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் என வளர்ச்சியைப் பெற்றாலும், நியாயமான முறையில் தேர்தல் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. 1951-52-ல் 173 லட்சத்து 212 ஆயிரத்து 343 வாக்காளர்கள் இந்தியாவில் இருந்தனர். இன்று அது 4.7 மடங்காக உயர்ந்துள்ளது. 1962-ல் நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலில்தான் முறையாக அச்சிட்ட வாக்குச்சீட்டில், விரும்பும் வேட்பாளரின் சின்னத்தில் அம்புக்குறி ரப்பர் முத்திரை பதிக்கும் வசதி ஏற்பட்டது. இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் 7, மாநிலக் கட்சிகள் 40 உள்ளன. இவை நீங்கலாக, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 1,500-ஐத் தாண்டும்.
அரசியலும் குற்றப் பின்னணியும்
கடந்த வாரம் ‘டைம்' ஏட்டில் 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் இந்தியாவில் வாக்களிக்க உள்ளனர் என்றும், அமெரிக்காவில்கூட 2012-ல் அதிபர் தேர்தலில் 19.37 கோடி வாக்காளர்களே வாக்களித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இந்தியாவில் 2009-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30 % குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் தேர்தலின் நடைமுறைகள் மாறிக்கொண்டுவருகின்றன. தேர்தலில் சீர்திருத்தம் வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் வர வேண்டும். தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்பட்டு, பணபலம் கொண்டவர்களும் கிரிமினல்களும் அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்குச் சென்றுவிடுகின்றனர். பழைய தேர்தல் நிகழ்வுகளையும், இன்றைக்குள்ள ஆர்ப்பாட்டமான தேர்தல் நிகழ்வுகளையும் எண்ணிப் பார்க்கும்போது மலைக்க வைப்பது மட்டுமல்லாமல், கவலைப்படவும் வைக்கிறது.
என்னதான் திட்டங்களைத் தீட்டினாலும், சட்டங்கள் இருந்தாலும், சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், வாக்காளர்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது. தகுதியே தடை என்பதைப் புறக்கணித்து பொருத்தமானவர்கள், நல்லவர்கள், மக்கள் பிரச்சினைகளில் புரிதல் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களாகச் செல்ல வேண்டும். தேர்தல்களில் பணம் விளையாடுவதும், வாக்காளர்கள் ஓட்டுக்குப் பணம் எதிர்பார்ப்பதும், குற்றப் பின்னணி கொண்டவர்கள் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப் படும் நிலை ஏற்படும். இந்நிலை காலப்போக்கில் நமது ஜனநாயக அமைப்பையே பலவீனப்படுத்திவிடும். இந்தச் சீரழிவைத் தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
- கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், ‘கதைசொல்லி' இதழின் ஆசிரியர், தொடர்புக்கு: rkkurunji@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT