Last Updated : 11 Apr, 2014 01:01 PM

 

Published : 11 Apr 2014 01:01 PM
Last Updated : 11 Apr 2014 01:01 PM

மதுரையை மையம் கொண்ட காங்கிரஸ் ‘சூறாவளிகள்’: மக்களைச் சந்திக்காமல் வாக்கு சேகரிக்க முயற்சி

மதுரையை மையம் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டாமல், தங்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வருவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் அதிக கட்சிகளை இணைத்து மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் இதுவரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால், தனியே போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கோ வெறும் 3 நாள்களில் அடுத்தடுத்து 4 தலைவர்கள் 6 முறை பிரச்சாரத்துக்காக மதுரைக்கு வந்துள்ளனர்.

4 நாள்கள் பிரச்சாரம்

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஏப். 7-ம் தேதியும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாநில தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோரும் மதுரை வந்தனர். மறுநாள் (ஏப். 9) காலை 10 மணிக்கு தங்கபாலு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். வியாழக்கிழமை (ஏப். 10) மறுபடியும் ஞானதேசிகன், ப.சிதம்பரம் ஆகியோர் மதுரை வந்துவிட்டனர். ஆக, 4 நாள்களாக காங்கிரஸ் புயல் மதுரையை மையம் கொண்டிருந்தது.

இது எந்தளவுக்கு மதுரை காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.பாரத் நாச்சியப்பனுக்கு பலன் கொடுத்தது என்று விசாரித்தோம். மதுரைக்கு வந்த 4 தலைவர்களும், வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய நேரத்தைவிட, குளுகுளு அறையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த நேரம்தான் அதிகம். ஜி.கே.வாசன் 7 இடங்களில் பிரச்சாரம் செய்தார். ஜி.கே.வாசன் மதுரையில் 7 இடங்களில் பிரச்சாரம் செய்தது, வேட்பாளருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

நிராசையானது

மறுநாள் ப.சிதம்பரம் மதுரை வந்தது வேட்பாளருக்கே தெரியாது. இருந்தாலும், அழையா விருந்தாளியாக அங்கே சென்ற வேட்பாளர், செய்தியாளர் சந்திப்பு முடியும் வரை சுமார் 50 நிமிடங்கள் கால்கடுக்க நின்றார்.

தன்னை ஆதரித்து அவர் பேசுவார் என்ற வேட்பாளரின் ஆசையும் நிராசையானது. பி.எஸ்.ஞானதேசிகன் கொஞ்சம் பரவாயில்லை. ஏப். 8-ம் தேதி இரண்டு இடம், ஏப். 10-ம் தேதி இரண்டு இடம் என்று 4 இடங்களில் பிரச்சாரம் செய்தார். தங்கபாலுவோ ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டுப் போய்விட்டார்.

ஆக, காங்கிரஸ் தலைவர்களைப் பொருத்தவரையில் ஜி.கே.வாசனைத் தவிர மற்ற அனைவருக்கும் கட்சியை பெவற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட, கட்சிக்காக நானும் பிரச்சாரம் செய்தேன் என்று கணக்கு காட்டுவதே நோக்கமாக இருக்கிறது. இப்படியிருந்தால் எப்படி ஜெயிக்க முடியும்?” என்று வேதனைப்படுகிறார்கள் காங்கிரஸார்.

தகவல் தெரிவிக்கவில்லை

மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஜி.கே.வாசன், பி.எஸ்.ஞானதேசிகனைத் தவிர மற்ற இரு தலைவர்களும் மதுரை வருவதாக மாநகர் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இப்படியிருந்தால் அவர்களது தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை நாங்கள் எப்படிச் செய்ய முடியும்? இதேநிலைதான் அண்டை மாவட்டங்களிலும் நிலவுகிறது என்றார்.

ஆக, மதுரையை மையம் கொண்டுள்ள காங்கிரஸ் புயல், வேட்பாளருக்கு வாக்கு மழையைத் தருவதற்குப் பதில் கட்சிக்கு சேதத்தையே அதிகம் விளைவிக்கும் என்பதே இன்றைய கள நிலவரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x