Published : 20 Apr 2014 07:33 PM
Last Updated : 20 Apr 2014 07:33 PM
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார்.
வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்.
அதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ம் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜீவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்தது.
வரும் 24 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று கருணாநிதி கூறியிருந்தார்.
அற்புதம்மாள் வேண்டுகோள்
இந்நிலையில், சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, "எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.
என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.
நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது. மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அற்புதம்மாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT