Published : 15 Apr 2014 11:06 AM
Last Updated : 15 Apr 2014 11:06 AM

சாராய விற்பனையில்தான் சாதனை: அதிமுக அரசுக்கு எதிராக அன்புமணி பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா சாராய விற்பனை தவிர வேறு எதையும் உயர்த்தவில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலுச்செட்டிசத்திரம் அடுத்த தாமல் கிராமத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு நல்ல அரசு நிர்வாகம் தரமான கல்வி, சுகாதாரம், விவசாய இடுபொருள் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.ஆனால் முதல்வர் ஜெயலலிதா சாராய விற்பனை தவிர வேறு எதையும் உயர்த்தவில்லை. காணொளி காட்சி நிர்வாகத்தையே நடத்தி வரும் ஜெயலலிதா ஏன் மக்களை காணொளி காட்சி மூலம் சந்திக்காமல் நேரில் ஏன் வருகிறார் என்பது புரியவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டது. அதனால் அவர் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கருணாநிதி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக அன்புமணி வருவதற்கு முன்பாக பிரச்சாரத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் பலர், பொது இடங்களில் புகை பிடிக்க தடை என்ற சிறப்பான சட்டத்தை கொண்டு வந்தவர் என அன்புமணி புகழ் பாடிக்கொண்டிருந்தனர். இதை பாமக தொண்டர்கள் பலர் புகை பிடித்தபடி கேட்டுக் கொண்டிருந் தனர்.

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கிராமங்களில் மின்வெட்டு அதிகரித்து வருவதால் வாக்காளர்களைக் கவர கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட விசிறிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x