Published : 20 Apr 2014 11:47 AM
Last Updated : 20 Apr 2014 11:47 AM

சின்னங்களின் கதை

தேர்தல் திருவிழா களைகட்டியிருக்கிறது. வருகின்ற 24-ம் தேதி நமது ஆட்காட்டி விரலில் அடையாள மையிட்டு, நாம் விரும்பும் கட்சிகளின் சின்னங்களில் வாக்களிப்பதன் மூலம் நமது வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கின்றோம். 1996-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பின், ம.தி.மு-வின் குடை சின்னமும், கட்சியின் அங்கீகாரமும் தேர்தல் ஆணையத்தால் திரும்பப் பெறப்பட்டது. அந்தச் சமயத்தில், டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடையாய் நடந்தபோது, அரசியல் கட்சிகளின் சின்னங்கள்பற்றி பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு கட்சி தேர்தலில் பங்கேற்று, குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தால், அல்லது நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் குறிப்பிட்ட இடங்கள் பெற்றிருந்தால்தான், தேர்தல் ஆணையம் அந்தக் கட்சி கேட்கும் சின்னத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கும் என்பதே. இதுபோன்ற தகவல்களையும், கூடவே தேர்தல் சின்னங்கள்குறித்த பழைய மலரும் நினைவுகளையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

சுகுமார் சென்

நாட்டின் விடுதலைக்குப் பின், முதல் பொதுத்தேர்தல் 1951 அக்டோபர் மாதம் துவங்கி 1952 பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. தமிழகத்தில் 1952 ஜனவரி மாதத்தில் ஒன்பது நாட்கள் தேர்தல் நடந்தது. அப்போதிருந்த சென்னை ராஜதானியில் மொத்தம் 375 சட்டப்பேரவைத் தொகுதிகள். அதில் தமிழ்நாட்டில் 190 தொகுதிகளும், மற்றவை மலபாரிலும் (கேரளம்), ஆந்திரத்திலும் இருந்தன. அப்போது சின்னங்களெல்லாம் கிடையாது. மஞ்சள் பெட்டி காங்கிரஸ், சிவப்புப் பெட்டி நீதிக் கட்சி, பச்சை முஸ்லிம் லீக், ஊதாவும் கருநீலமும் சுயேச்சைகளுக்கு என்று வாக்களிக்கத் தனித்தனி வண்ணப் பெட்டிகளாக இருந்தன. வாக்குப்பதிவு நாளன்று, வாசிக்கத் தெரியாத வாக்காளரிடம் அரசியல் கட்சிகளின் வண்ணங்களை அழுத்திச் சொல்வது 1950-களில் வாடிக்கையாக இருந்தது. 1950-ல் சுகுமார் சென் இந்திய முதன்மைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர், மற்ற நாடுகளில் தேர்தல் நடப்பை ஆராய்ந்து வாக்குச் சீட்டு என்பது கட்சிகளின் சின்னங்களை உள்ளடக்கி அமைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குப் பொருத்தமான சின்னங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டன. அதன் பின்தான் சின்னங்கள் நடைமுறைக்கு வந்தன. எனவே, இந்தியத் தேர்தல் முறைக்கு சின்னங்களை அறிமுகப்படுத்தியவர் சுகுமார் சென்தான்.

50 ஆண்டுகளாக உதயசூரியன்

இரண்டாவது பொதுத்தேர்தலில் காங்கிரஸின் சின்னம்- நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளைகள் சின்னம், கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கதிர் அரிவாள் சின்னம்; 1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க., தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் பல சின்னங்களில் போட்டியிட்டது. இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. முறையான அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இந்தியாவிலேயே ஒரே சின்னத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது தி.மு.க. மட்டுமே.

1959-ல் ஆரம்பிக்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் கிடைத்தது. 1969-ல் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்ததன் விளைவாக, நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸுக்குப் பசுவும் கன்றும் சின்னமும், ஸ்தாபன காங்கிரஸுக்குக் கைராட்டை சுற்றும் பெண் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

1964-ல் பிளவுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட்டுக்குக் கதிர் அரிவாள் சின்னமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோர் வழிநடத்திய பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு ஆலமரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிக்குக் குடிசைச் சின்னம் கொடுக்கப்பட்டது. ஏர் உழவன் சின்னத்தை 1977 வரை பாரதிய லோக் தளம் (பி.எல்.டி.) பயன்படுத்தியது.

1977-ல் காங்கிரஸ் இந்திரா காந்தி தலைமையிலும், பிரமானந்த ரெட்டி தலைமையிலும் பிளவுபட்டபோது காங்கிரஸ் (இ) கட்சிக்குக் கை சின்னமும், காங்கிரஸ் (இ) எதிர்ப்பான, கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸின் கட்சியான காங்கிரஸ் (யு) கட்சிக்கு இரட்டைக் காளை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

நெருக்கடிநிலை முடிவுக்கு வந்த பிறகு, 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி என உருவாகி, பி.எல்.டி-யின் சின்னமான ஏர் உழவர் சின்னத்தில் போட்டியிட்டனர். அதுவரை பாரதிய ஜனசங்கம் தீபத்தைத் தனது சின்னமாகப் பயன்படுத்திவந்தது. பார்வர்டு பிளாக் கட்சி, சிங்கம் சின்னத்தைப் பயன்படுத்தியது. சிங்கம் சின்னத்தைப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சின்னம் என்பார்கள்.

கலைமகளின் சின்னம்

1980-ல் ஜனதா கட்சியிலிருந்து வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி என்றும், சந்திரசேகர் தலைமையில் ஜனதா கட்சியென்றும் தனித்தனியாகப் பிரிந்தனர். பா.ஜ.க-வுக்குத் தாமரை சின்னமும் ஒதுக்கியபோது, அது கலைமகளின் சின்னம், மதரீதியான அடையாளம், எனவே ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டு, விசாரணையும் நடந்தது. ஜனதாவுக்குக் குடை சின்னம் கிடைத்தது.

ஜனதா கட்சியிலிருந்து சரண்சிங்கும் ராஜ்நாராயணனும் பிரிந்தனர். சரண்சிங்கின் லோக் தளம் கட்சிக்குப் பெண் சின்னமும், ராஜ்நாராயணனுக்கு சைக்கிள் சின்னமும் கிடைத்தது. அந்த சைக்கிள் சின்னத்தைத்தான் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி பயன்படுத்துகிறது. திரும்பவும் வி.பி. சிங் தலைமையில் 1989-ல் உருவான ஜனதா தளத்துக்குச் சக்கரம் சின்னம் கிடைத்தது. ஜனதா தளம் இப்போது ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றெல்லாம் உடைந்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு அம்பு சின்னமும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நெற்கதிர் சுமக்கும் பெண் சின்னமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தேசியக் கட்சிகள் பெற்ற சின்னங்களின் வரலாறு. நான்கு மாநிலங்களில் ஒரு மாநிலக் கட்சி செயல்பட்டால் அது தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.

யானைக்கு விதிவிலக்கு

வாளும் கேடயமும், மண்வெட்டி, ஏணி, அம்பு-வில், தென்னை மரம் போன்ற சின்னங்கள் பல மாநிலக் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றைத் தேர்தலில் சின்னமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தியதால், விலங்குகளைத் தேர்தல் சின்னங்களாகத் தேர்ந்தெடுப்பது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் சின்னங்கள் பதிவு மற்றும் ஒதுக்கீடு ஆணை 1968, திருத்தம் ஜூலை 2013-ன்படி சின்னங்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றன.

அசாமிலும் இரட்டை இலையா?

மாநிலக் கட்சிகளின் சின்னங்களை மற்ற மாநிலங்களில், வேறு கட்சிகள் பயன்படுத்தலாம். ஆந்திரத்தில் தெலுங்கு தேசமும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடியும் சைக்கிள் சின்னத்தைப் பயன்படுத்துகின்றனர். அசாமில் அசாம் கன பரிஷத்துக்கும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்கும் இரட்டை இலைச் சின்னம்தான். கட்சிகளின் பிளவுகளின்போது சின்னங்கள் குறித்துப் பல வழக்குகள் தேர்தல் ஆணையம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்றன.

தற்சமயம் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 6 தேசியக் கட்சிகளும், 47 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளும், 1,563 அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சிகளும் மற்றும் 1,616 பதிவுசெய்த மாநிலக் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், சின்னங்களைப் பொறுத்தவரை 6 தேசிய கட்சிகளுக்கும், 47 மாநில கட்சிகளுக்கும் அவர்களுக்குரிய சின்னங்களும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நிபந்தனையோடு சின்னங்களும் ஒதுக்கப்படுகின்றன.

நம்மால், நமக்காக ஆள இருக்கின்ற நமது பிரதிநிதிகளை நம்முடைய கைகளின் பலத்தால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் வாக்குரிமைதான் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. எனவேதான், பாமரரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சின்னங்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்,
இணை ஆசிரியர், ‘கதை சொல்லி' இதழ்,
தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x