Published : 13 Apr 2014 12:15 PM
Last Updated : 13 Apr 2014 12:15 PM

நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: மீனம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அடுத்ததாக பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இதுகுறித்து பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், சென்னையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் தேசிய ஜன நாயகக் கூட்டணி அமைந்த பிறகு, முதல்முறையாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் தென்சென்னை தொகுதி வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்துப் பேசுகிறார். சென்னை வரும் மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசவும் வாய்ப்புள்ளது. ( விரிவாக ->போயஸ் கார்டன் வீட்டில் இன்று ரஜினியை சந்திக்கிறார் மோடி)

வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தில் மோடி பிரச்சாரம் செய்கிறார். கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கோவை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரும் 18-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி, வரும் 16-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல், மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் வேலூர், கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

இதேபோல் பாஜக சிறுபான்மை பிரிவு மூத்தத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியும் வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கடந்த முறை மோடியின் பொதுக்கூட்டத்தை வைகோ புறக்கணிக்கவில்லை. அவர் பங்கேற்கவில்லை அவ்வளவுதான். இந்த முறை அனைத்து தலைவர் களையும் ஒரே மேடையில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். ஆனாலும், கூட்டணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூட்டத் திலாவது, பாஜக தலைவர்களுடன் பங்கேற்பர்.

மாநிலக் கட்சிகளால் மட்டும் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. தேசியக் கட்சிதான் அனைத்து மாநில நலனிலும் அக்கறை செலுத்த முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கவனம் செலுத்தும். தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளை கூறாவிட்டாலும், மாநில அளவி லான தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

திமுக தலைவர் கருணாநிதி மிக வயதானவர். பாஜகவை மதவாதக் கட்சி என்று அவர் கூறுவது, காலத்துக்கு ஏற்றபடி பாடும் பாடல் அவ்வளவுதான்" என்றார் முரளிதர் ராவ்.

பாஜக தலைவர்களின் நிகழ்ச்சி விவரங்கள், பின்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றும் முரளிதர் ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x